மேல் மாகாணத்தில் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் முக்கியஸ்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிகளவில் பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் முறைப்பாடுகளை உரிய முறையில் விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இடங்களில் பாதுகாப்பிற்காக மேல் மாகாண பொலிஸ் அதிகாரிகள் பல குழுக்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வாரம் முழுவதும் 12 மணித்தியாலங்கள் அவர்கள் கடமையாற்றுவதாகவும் பல பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் பெருமளவிலான அதிகாரிகளை உள்ளடக்கிய பல உயரடுக்கு பாதுகாப்பு படைகள் பிரபுக்களுக்காக செயற்படுகின்ற போதிலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் பிரபுக்களின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்படுவதாகவும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரிக்காமலும் பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் இருப்பதும் பொலிஸாருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே நிலை நீடித்தால், பொலிஸாருக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும், பல அதிகாரிகள், உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது