3வேளை உணவை பெறமுடியாத நிலையில் 60வீத மக்கள்!

நாட்டில் 60 சதவீதமான மக்கள் மூன்று வேளை உணவைப் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களுக்கு ஆரோக்கியமான உணவை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், நாட்டில் 60வீதமானவர்களுக்கு மூன்று வேளை உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் எரிவாயு எரிபொருள் என்பவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக சந்தையினுள் மக்களுக்கு உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக நாம் கிழங்கு, பலா உள்ளிட்ட கிராமிய பாரம்பரிய உணவுப்பொருட்களை பெற்றுக்கொண்டு நகர் புறங்களில் வாழும் மக்களுக்கு போசணை மிகுந்த உணவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

உணவுப்பொருள் தட்டுப்பாட்டின் காரணமாக சிறுவர்கள், கர்ப்பவதி தாய்மார்கள் மற்றும் முதியவர்களே பெரும் பாதிப்புகளுக்க்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு வாரமாக முட்டையை காணாத சிறுவர்கள் நாட்டில் உள்ளனர். இது பெரும் சிக்கல் நிலையாகும். ஆகவே, நாம் கிராமங்களில் உள்ள மரக்கறி வகைகள் கிழங்கு வகைகள் என்பவற்றை கொழும்பு உள்ளிட்ட நாட்டின் நகர் புறங்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அரச நிறுவன ஊழியர் ஒருவரின் உணவுப்பொதியில் உள்ள கறி வகைகளை எடுத்துக்கொண்டால் அதனுள் முட்டையோ, கடலுணவோ , இறைச்சி வகையோ உள்ளடங்கவில்லை. அத்தகைய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளளோம். ஆகவே, நாட்டுப் பிரஜைகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்கும் திட்டமொன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews