இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ICTA ஆனது நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இருப்பை சரிபார்க்க இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, தினசரி காலை 9.00 மணிக்கு எரிபொருள் இருப்பு மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படும், அதன் பிறகு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இணையதளம் புதுப்பிக்கப்படும்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் விநியோக செயற்பாட்டை மட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டீசல் கையிருப்பு குறைந்தளவில் காணப்படுவதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப் பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் டீசல் விநியோகிக்கப்படும் என அதன் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார்.
தற்போது தினசரி டீசல் விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது சுமார் 40,000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.