74 வருட காலமாக இந்த நாட்டை ஆண்டவர்கள் தங்களது சொந்த பொருளாதாரத்தினை பெருக்குவதிலும், தமிழர்களை அழிப்பதிலுமே கவனம் செலுத்தினார்களே, தவிர தமது நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான எந்த திட்டத்தினையும் செய்யவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமகால பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வோம், தற்சார்பு வாழ்வினை நோக்கி பயணிப்போம் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிர் விதைகள் மற்றும் நாற்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட முனைக்காடு பகுதியில் உள்ள மக்களுக்கு வடகிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிர் விதைகள் மற்றும் நாற்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் கணபதிப்பிள்ளை குககுமாரராசா மற்றும் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது முதல்கட்டமாக 100குடும்பங்களுக்கு பயிர் விதைகள் மற்றும் நாற்கள் வழங்கிவைக்கப்பட்டன.