குடும்ப பெண் ஒருவர் தாக்கப்பட்டமையை கண்டித்தும் பொலிஸார் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உறவினர்கள் நீதி வேண்டி பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தந்தையுடன் மூன்று பிள்ளைகளை ‘வீடு புகுந்து தாக்கியவர்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை.’ ‘வாழைச்சேனை பொலிஸார் ஒரு பக்கச்சார்பாக நடப்பது ஏன்.’ ‘எமக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி வேண்டும். ‘ என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமையன்று பதுரியா வீதி பிறைந்துறைச்சேனையில் வசிக்கும் இரண்டு குடும்பத்தினருக்கிடையில் இடம்பெற்ற பிணக்கானது கைகலப்பாக மாறியதினால் உதுமாலெப்வை றிஸானா வயது (36) என்ற குடும்பப் பெண் தலையில் பலத்த தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்ப பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தும் சந்தேகநபர்களுக்கெதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்காமையினால் நீதி வேண்டி வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சம்பவ இடத்தில் இவர்களுக்கு ஆதரவாக ஒன்று கூடியுள்ளனர்.
இதன்போது பொலிஸார் ஒன்று கூடியவர்களை கலைந்து செல்லுமாறும் போராட்டத்தினை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கைது செய்தால் மாத்திரமே தமது போராட்டத்தினை கைவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார் விரைந்து செயற்பட்டு சந்தேகநபர்கள் மூவரை விசாரணைக்கு அழைக்கப்பட்டதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.