ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் – ஆசிரியர்கள் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் தேசிய பொது வீதிகள் சட்டம், அமைதியற்று செயற்பட்டமை, முறையற்ற வகையில் ஒன்றுகூடியமை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
16 பெண்கள் 26 ஆண்கள் உள்ளிட்ட 42 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் இப்பேரணியில் கலந்து கொண்ட 10 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இரு விசேட பொலிஸ் குழுவினர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு விளக்கமளித்து அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்தபோதிலும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் சட்டவிரோதமாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த 24 நாட்களாக இணையவழி கற்பித்தலில் இருந்து விலகி தங்களது சம்பள முரண்பாடு தொடர்பில் தீர்வு வழங்குமாறு தெரிவித்து ஆசிரியர்கள் – அதிபர்கள் இன்று (04) முற்பகல் வாகன பேரணிகள் 4 இன் மூலம் கொழும்பை வந்தடைந்தனர்.
கைதான நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.