இந்தத் தகவலை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2020 மற்றும் 2021 கொரோனா தொற்றுநோய் பரவல் ஏற்பட்ட இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்தது. இந்தக் காலப்பகுதியில் நாட்டின் சராசரி குடும்ப மாத வருமானமும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு முன்பாக குடும்பம் ஒன்றின் சராசரியாக ரூ. 76,414 மாத வருமானத்தை ஈட்டியுள்ளது.
கொரோனா தொற்றின் முன்னர் 3.7 நபர்களை கொண்ட ஒரு சராசரி குடும்பத்தின் மாத வருமானம் ரூ. 75,000இற்கு மேல் இருந்தது. எனினும், நாட்டில் நகர்புறம், கிராமம் மற்றும் மலையக தோட்டப்பகுதிகள் ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் இடையே வருமானத்தில் பெரியளவிலான வேறுபாடுகள் உள்ளன.
2019 தரவுகளின் அடிப்படையில் நகர்புற குடும்பத்தின் சராசரி வருமானம் ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 670 ரூபாயாகவும், கிராமப்புற குடும்பத்தின் சராசரி வருமானம் 69 ஆயிரத்து 517 ரூபாயாகவும், மலையக பெருந்தோட்டத்துறை குடும்பத்தின் சராசரி வருமானம் 46 ஆயிரத்து 865 ரூபாயாகவும் காணப்பட்டது.
2020, 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்காலத்தின் பின்மிகை பணவீக்கத்தின் விளைவாக குடும்ப வருமானம் வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக குடும்பங்கள் மே 2022 வரை ஒரு வருடத்துக்குள் தங்கள் பெயரளவு வருமானத்தின் மதிப்பில் 40 சதவீதத்தை இழந்தன.
இலங்கையில் உள்ள வறிய குடும்பங்களில் 20 வீதமானவர்கள் ரூ. 17,572 மட்டுமே வருமானம் ஈட்டுவதாகவும், 40வீதமானவர்கள் ரூ. 26,931 வருமானம் ஈட்டுவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையில் உள்ள பணக்கார குடும்பங்களில் 20 சதவீதத்தினர் சராசரியாக மாதத்துக்கு ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 289 ரூபாய் சம்பாதிக்கின்றனர். இருப்பினும் கடந்த ஆறு மாதங்களில் பணவீக்கம், விலையேற்றத்தால் அவர்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்துள்ளது.
நடுத்தர 60 சதவீத குடும்பங்கள் (3.7 நபர்களைக் கொண்டவை) சராசரியாக 56 ஆயிரத்து 79 ரூபாய் மாத வருமானத்தை ஈட்டியுள்ளன.
80 வீதமான குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இது பிரதிபலிக்கிறது. இதேவேளையில் பணவீக்கத்தின் காரணமாக 40 வீதமானவர்கள் மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் – என்று அந்தத் தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.