இத்துணை பொருளாதார நெருக்கடியிலும் வல்லாதிக்க பெளத்த மேலாண்மையை கைவிடாத மோசமான மனநிலையை இத்தீவிலிருந்து ஒழிக்கப்பட முற்போக்கு சக்திகள் முன்வர வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை சைவ மகாசபை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
கிழக்கு திருகோணமலை மண்ணில் அரங்கேற்றப்பட்ட விடயங்கள் இன்று வன்னி முல்லைத்தீவு மண்ணில் தொடர்கிறது .
குருந்தூர் மலை ஆதி சிவபூமி . திருமலையும் முல்லையும் சந்திக்கின்ற மணலாறு இதயபூமிக்கு அண்மித்ததாக உள்ளதே குருந்தூர் மலை.
பண்டார வன்னியன் ஆண்ட வன்னி அரசினதும் கூழங்கை சக்கரவர்த்தி எனும் மாகனது ஆட்சிக் காலத்திலும் முன்னைய குளக்கோட்டன் உட்பட்ட பண்டை தமிழ் மன்னர் ஆட்சி காலத்திலும் இந்த பெருநிலப்பரப்பு மிகவும் உன்னதமான சைவத் தமிழ் பண்பாட்டு செழுமையுடன் காணப்பட்டத்திற்கு இலக்கிய, தொல்லியல் வரலாற்று ஆதாரங்கள் பல உள்ளன.
இவற்றை எல்லாம் மறுதலித்து தொன்று தொட்டு இன்று வரை தமிழர்களே மட்டும் வாழ்ந்து வரும் சிவபெருமானின் குறியீட்டு வடிவாகிய சூலத்துடன் ஆதி சிவ அய்யனாக
பூர்வக் குடிகள் ஆயிரம் வருடங்களாக வழிபாடு செய்து வரும் சிவ பூமியின் வரலாற்றை திரிபுபடுத்த முனைவது மிகவும் மோசமான அறமற்ற செயற்பாடாகும்.
சிவ வழிபாட்டு பூமி என்பதை இங்கு அண்மைய ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய தமிழ் மன்னர் கால எட்டுப்பட்டை தரா லிங்கமும் சான்று பகிர்கின்றது. இருப்பினும் இந்த இலிங்கம் கண்டெடுக்கப்பட்ட போது எழுந்த உணர்வு அலைகள் சிறிது சிறிதாக மழுங்ககடிக்கப்பட்டது..
தற்போது சைவத்தமிழர், சிங்கள பெளத்தர், முசுலிம்கள், கிறிசுத்தவர்கள் என முழுத்தீவின் இன மதக் குழுமங்களும் பொருளாதார நெருக்கடியால் அன்றாட வாழ்வில் அவலங்களை சந்தித்து வரும் நிலையில் வேக வேகமாக நீதிமன்ற உத்தரவையும் மீறி பழைய பாணியில் புதிதாக தூபியை நிறுவி புத்தரை நிலைநிறுத்த முயலும் செயற்பாடுகள் பகிரங்கமாக முன்னெடுக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
பொதுவாக புத்தர் போதித்த உண்மையான தர்மத்தை பின்பற்றுவோர் இவ்வாறான செயல்களை செய்யமாட்டார்கள். அதுவும் கர்மா கணக்கின் காரணமாகவே நாட்டில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் பழைய மோசமான தவறுகளிற்கு பகிரங்கமாக பல இளையோர் கலைஞர்கள் தங்கள் ஆதங்கங்களை பொது வெளியில் பகிரங்கப்படுத்தி உள்ள இத்தருணத்தில் புரையோடி போய் இருக்கும் ஆறாத வடுக்களை மீள கிளற உண்மையான சிங்கள பெளத்தர்கள் அனுமதிக்க கூடாது என்பதே இந்த தருணத்தில் மனிதாபிமான சிந்தனைகளும் ஏழைகளின் பசிப்பிணி உடற் பிணி தீர்க்கும் பணிகளிலுமே முன்னுரிமை பெற வேண்டும் என விரும்பும் மனிதத்தை நேசிக்கும் சைவத்தமிழர்களின் பெருவிருப்பாகும் என்பதை சுட்டிகாட்டி நிற்கின்றோம். என்றுள்ளது.
– அகில இலங்கை சைவ மகா சபை