வடக்கு கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அதிபர் இடமாற்றத்தில் சிலரை வெளி மாவட்டம் செல்லாது பாதுகாக்க கல்வி அமைச்சின் செயலாளர் எடுத்த முடிவே ஏனைய அதிபர்கள் கடமைகளைப் பொறுப்பேற்க செல்லாமைக்கான காரணம் என தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.
யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் ஆசிரியர் நியமனத்திலும் அதிபர் நியமனத்திலும் வெளி மாவட்டம் செல்லாத அதிபர்கள் வெளி மாவட்டம் செல்ல வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர்கள் இடமாற்றத்தை தான் நினைத்தபடி மேற்கொள்ள முடியாது.
பணி இடமாற்றம் வழங்கப்பட்ட 27 அதிபர்களும் வெளி மாவட்டத்திற்கு செல்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர்களது மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்ட நிலையில் கடமைக்கு செல்லவில்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகிறது.
இதற்கு பிரதான காரணமாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தனக்கு வேண்டிய இருவரின் அதிபர் இடமாற்றத்தை நிறுத்துவதற்கு முனைந்தன் விளைவே ஏனைய அதிபர்களும் கடமைகளைப் பொறுப்பேற்க செல்லாமைக்கான காரணம் .
கல்வி அமைச்சின் செயலாளர் தமக்கு வேண்டியவர்களை காப்பாற்றுவதற்காக முறைமை ஒன்றை தனக்கு வேண்டியவர்களுக்கு தெரிவித்ததாக எமக்கு அறியக் கிடைத்தது.
அதாவது அதிபர் இடமற்றத்தை வழங்கிய முறையில் அனைவரும் கடமைகளை பொறுப்பேற்க ப்பட்டும் ஓரிரு நாட்களின் பின்னர் உங்கள் கோரிக்கையை ஏற்று உங்கள் இடமாற்றத்தை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
இதனை அறிந்த ஏனைய அதிபர்கள் சுதாகரித்துக்கொண்ட நிலையில் எல்லோரும் சென்றால் தாமும் செல்வோம் என ஒருவரை ஒருவர் காரணம் காட்டி கடமையை பொறுப்பேற்காது பின்னடித்து வருகிறார்கள்.
இவ்வாறான நிலையில் வடக்கு கல்வியமைச்சில் இடம்பெற்ற ஊழல் மோசடி நிர்வாக முறைகேடு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்கள் பலரிடமும் எழுத்து மூலமான முறைபாடுகளையும் ஆதாரங்களையும் வழங்கினோம். ஆனால் எந்த ஒரு ஆளுநர்களும் முறையான விசாரணைகளை இதுவரை மேற்கொண்டு தீர்வு வழங்க முன்வரவில்லை ஆகவேதான் வடக்கு கல்வி அமைச்சில் அன்று தொடக்கம் இன்றுவரை பல்வேறு ஊழல் மோசடிகள் முறையற்ற நிர்வாகம் காரணமாக கல்வியை கட்டியெழுப்ப முடியாது காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.