பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்க முடியாது..! ஆசிரியர் சங்கங்கள் திட்டவட்டம்.. |

நாடு தற்போதுள்ள சூழலில் பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியாக உள்ளதென இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கூறியிருக்கின்றது.

இது குறித்து சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியாக உள்ளது. இதனை அரசாங்கம் உணராமல் இருப்பது வேதனையாக உள்ளது.

இன்றைய மோசமான நிலைமை இலங்கையில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்தே செல்கின்றன. ஆனாலும் அப்பொருட்களைப் பெறமுடியாமல் உள்ளது.

அதன் காரணமாக சகல துறைகளுமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலை என்பது மாணவரை மையப்படுத்திய நிறுவனமாகும்.

மாணவர் துயரப்பட்டு பாடசாலைக்கு வந்து கற்க முடியாது. அவர்களுக்கு கல்வியூட்டும் கல்வியியலாளர்கள் குடும்பங்களோடு இணைந்தவர்கள்.

அவர்கள் ஏனைய மக்களைப் போன்று பல்வேறு சிரமங்களையும் சுமந்தவர்களாக உள்ளனர்.

அவை எவற்றையும் பொருட்படுத்தாமல் பணியை தர்மமாகக் கருதி பணியாற்றும் அவர்கள் கடமைக்கே செல்லமுடியாது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து மார்க்கங்கள் எதுவுமே சீராக இல்லை. தாமாகச் செல்வதற்கும் வழியில்லை.இந்த நிலையில் பாடசாலைகளை தொடர்ந்து இயக்க முடியாது. என்பதனை அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

மீண்டும் தோற்றுப்போன இணையவழி முறையை அரசாங்கம் புகுத்தி நாட்டில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்னும் சுமையை ஏற்படுத்தப்போகின்றது.

ஆகையால் நாம் முன்வைத்த மாணவர், ஆசிரியகளுக்கான போக்குவரத்து மார்க்கங்களை இலவசமாக்குவதே பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்க ஒரேவழியாகும்.

இதைவிட தொடர்ச்சியாக வரவழைப்பதைத் தவிர்த்து சுழற்சிமுறையை பயன்படுத்த வேண்டும். என கல்வி அமைச்சிடம் தெரிவித்துள்ளோம்.

Recommended For You

About the Author: Editor Elukainews