நாட்டின் கடனை அடைக்க முடியாத நிலையில் அரசு இருக்கின்ற போது வாகன குத்தகை பணத்தை எவ்வாறு மக்கள் செலுத்துவது என பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்ற நிலையில் அவர் இவ்வாறு ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் தலை தூக்கியுள்ளது. இந்த நிலையில் குத்தகை வாகனங்களிற்கான நிதியை செலுத்த முடியாத நிலையில் மக்கள் இருக்கின்றார்கள். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பெற்றோல், டீசல் மண்ணெண்ணை எதுவும் இல்லாமையால் வாகனங்கள் ஓடமுடியாது இருக்கின்றது.
குத்தகை தொகையை செலுத்த முடியாத நிலையில் வாகனங்களை பறிப்பதற்கு முயற்சிகளை நிதி நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன. யுத்தம் காரணமாக உழவு இயந்திரம், முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களை குத்தகை அடிப்படையில் மக்கள் பெற்றுள்ள நிலையில் அதிக வட்டிகளை அறவிடும் வகையில் வங்ககள் செயற்படுகின்றன.
அரசினால் இலங்கை தீவில் உள்ள கடனை கட்டமுடியாமல் உள்ளது. தனியே ஒருவர் முச்சக்கரவண்டியைவைத்து உழைத்து வாழ்வதற்கு பெற்றோல் இல்லை. மூன்று மாத்தில் அவரது குத்தகை செலுத்தப்படாவிடில் அவரது வாகனம் பறிமுதல் செய்யப்படுகின்றது. அறுவடை நேரத்தில் அதனை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரி கிளிநொச்சி மாவட்டத்திற்கு மண்ணெண்ணையை தடை செய்து வைத்துள்ளார். இங்கு எமக்கென்று அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். கரையோரத்தில் இருக்கின்ற மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு மண்ணெண்ணை இல்லாமல் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
கிளிநொச்சி முல்லைத்தீவுக்கு ஒரு சட்டம். ஆனால் புத்தளம் உள்ளிட்ட பகுதிகளிற்கு மண்ணெண்ணை வருகின்றது. ஏன் எமது பிரதேசத்திற்கு மாத்திரம் இவ்வாறான நிலை உள்ளது. எமது மக்களின் சொத்துக்கள் காப்பாற்றப்பட வுண்டும். தீர்வு வரும்வரை வாகனங்களிற்கான வட்டியை நிறுத்தி மக்களிற்கு சலுகை வழங்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.