
கடந்த 4 நாட்களுக்கு மேலாக வீதியில் தமது வாகனங்களுடன் டீசல் பெறுவதற்காக காத்திருக்க டீசல் வந்தவுடன் அதனை மக்களுக்கு வழங்காது அத்தியாவசிய மற்றும் அரச திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் டீசலை பெற்றுக்கொள்வதற்கும் காத்திருந்த மக்களுக்கும் இடையில் முரண்பாடு இடம்பெற்றன. இதனை அடுத்து பருத்தித்துறை பொலிசார் மற்றும் புலோலி பல நோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் ஆகியோர் டீசல் பெறுவதற்காக வந்திருந்த மக்களுடன் கலந்துரையாடி சிறிய டீசல் வாகனங்களுக்கு ரூபாய் 5000 க்கும். டிப்பர் மற்றும் பஸ்களுக்கு ருபா 7000 க்கு வழங்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்ட நிலையில் பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து டீசல் விநியோகம் சுமூகமாக இடம்பெற்றது.


இதேவேளை நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினுடைய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மூன்று நான்கு நாட்களாக காத்திருந்தவர்களுக்கும் அன்று டீசல் விநியோகம் இடம்பெற்றது.
அதேவேளை வெதுப்பகங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் நிறுவனங்கள் என்பவற்றிற்கும் டீசல் கொள்கலன்களில் வழங்கப்பட்டிருந்தன. அங்கு பிரதேச செயலர் வழங்கப்பட்ட அட்டை நடைமுறைக்கு அமைவாகவே டீசல் விநியோகம் இடம்பெற்றது.







இதேவேளை நெல்லியடி குஞ்சர்கடை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம்வரை காத்திருந்த மக்களுக்கும் இன்றையதினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெட்ரோல் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது