
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், தொழில்வாய்ப்பு தேடி வெளிநாடு செல்வோருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கு, எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு முன்னர்குறித்த நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரங்கள் மற்றும் குறித்த நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள வேலைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையதளத்தில் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ருமேனியா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பி மோசடியில் ஈடுபடும் குழுவினர் பணம் பறிப்பதற்கு முயற்சிப்பதாக அப்பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. எனவே, இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.