யாழ்.கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மதியம் குழப்ப நிலையேற்பட்டுள்ளது.
கல்வியங்காடு சந்தையுடன் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பரீட்சை கடமையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த அறிவிப்பினை யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் ஊடகங்களை சந்தித்தபோது விடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி தொடக்கம் பொதுமக்கள் வாகனங்களுடன் காத்திருந்த நிலையில் காலை 10.45 மணியளவிலேயே எரிபொருள் பவுசர் வந்துள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் தமக்கும் எரிபொருள் வழங்குமாறு கோரி குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். எனவும் அதற்கான அனுமதி மட்டுமே தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் குழப்பநிலை மேலும் உச்சம் தொட்டதால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்று வருகிற நிலையில் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் எரிபொருளை பெற்றுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் போது யாழ்.மாவட்ட செயலர், கல்வியங்காட்டில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் இரண்டு மணிக்கு பின்னர்
பிரத்தியேகமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்ததை அடுத்து மதிப்பீட்டு பணிகள் ஆரம்பமாகின என்பது குறிப்பிடத்தக்கது.