
வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று காலை ஆறு மணியிலிருந்து சேவையில் ஈடுபடாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினர் போராட்டம் வட பிராந்திய முகாமையாளர் உறுதி மொழியின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கும் இலங்கை போக்குவரத்து சாலைகளில் டீசல் நிரப்பும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந் நிலையில் பருத்தித்துறை சாலை முகாமையாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை கண்டித்து இன்றைய தினம் தனியார் பேருந்து சேவை சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆ.சிறி, பருத்தித்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, வடமராட்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், ஆகியோர் வடபிராந்திய பிராந்திய சாலை முகாமையாளரை அழைத்து அவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் 750 வழித்தடத்தில் நாளாந்தம் சேவையில் ஈடுபடும் 25 போக்குவரத்து வாகனங்களுக்கும் நாளாந்தம் 750 லிட்டர் டீசல் வழங்குவதாக உறுதி மொழி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு தற்போது தனியார் 750 வழித்தட சேவை போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பியது.