முச்சக்கர வண்டிக்கு எரிபொருளைப் பெறுவதற்காக வடமராட்சி ஆழியவளை பகுதியிலிருந்து இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா பயணிகளை கொண்டு சென்ற பேருந்து மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
வரிசையில் முச்சக்கர வண்டியை நிறுத்துவதற்கு முற்பட்ட வேளை அதிவேகமாக பயணித்த பேருந்து முச்சக்கர வண்டியை மோதி தள்ளியது இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், முச்சக்கர வண்டியும் முழுமையாக சேதமடைந்தது.
முச்சக்கர வண்டியின் சாரதி பளை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி வடமராட்சி ஆழியவளைப் பகுதியை சேர்ந்த 39 வயதுடையவர் என பளை பொலிசார் தெரிவித்தனர்.
இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் மற்றும் பெட்ரோலைப் பெற்றுக்கொள்வதற்காக நேற்றிலிருந்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் முச்சக்கர வண்டியின் சாரதியும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தந்த போது குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.