படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற முயன்ற 35 பேர் கைது.

படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற முயன்ற 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பகுதியை அண்மித்த கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்றைய தினம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

குறித்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பின்போது, சந்தேகத்திற்கு இடமான படகொன்று பயணிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடற்படையினர் குறித்த படகை முற்றுகையிட்டு, சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 35 பேரும், ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 25 ஆண்களும் 04 பெண்களும் 06 குழந்தைகளும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதுடன், அந்தப் படகு நீண்ட தூர பயணத்திற்கு உகந்தது கிடையாது என்பதும் உறுதியாகியுள்ளதாகக் கடற்படை குறிப்பிடுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கல்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற சுமார் 335-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews