நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குப்பட்டு அது தீர்க்க முடியாத அரசியல் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. இந்த அவலத்திற்குள் இலங்கைத்தீவு அகப்பட்ட நிலையிலும் பெருந்தேசிய வாதம் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு குருந்தூர் ஆதிசிவன் ஆலயச் சுற்றாடலில் கடந்த 12ம் திகதி புத்தர் சிலையை நிறுவும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. நீதிமன்றக்கட்டளையை மீறி அங்கு அமைக்கப்பட்ட இந்த விகாரையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதற்கான பெருந் தொகையான பிக்குகளும், சிங்கள மக்களும் வருகை தந்தனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குருந்தூர் மலை ஐயனார் சிவன் ஆலய நிர்வாகத்தினரும் , அரசியல் கட்சிகளும், பொது மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாலும் முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளையை மீறி செயற்பட்டதற்கு பொலிசாரிடம் விளக்கம் கேட்டதனாலும் சிலை நிறுவும் முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
குருந்தூர் மலையில் முல்லைத்தீவு மக்கள் சிறிய ஐயனார் சிவன் ஆலயத்தில் பூர்வீகக் காலம் தொடக்கம் வழிபாடுகளை நடாத்தி வந்தனர். தொல்பொருட் திணைக்களம் அதனைக் கையகப்படுத்தி ஆதிசிவன் ஆலயத்தை அகற்றி அவ்விடத்தில் புத்த விகாரை ஒன்றை கட்ட முயற்சித்தபோது குருந்தூர் மலை ஐயனார் சிவன் ஆலயநிர்வாகத்தினர் 2018ம் ஆண்டு இது தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். நீதிமன்றம் 13.09.2018இல் இது தொடர்பாக கட்டளையை விடுத்திருந்தது. அதில் குருந்தூர் மலைப் பிரதேசம் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் வருகின்ற பிரதேசம் எனவும் அப்பிரதேசத்தில் புதிதாக எந்தவிதமான கட்டிடங்களையும் அமைக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
பரம்பரையாக வழிபாடு செய்கின்ற சைவர்கள் அங்கு வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அதனை யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கட்டளையை மீறியே புத்தர் சிலை நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவ் விடயம் நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் இது தொடர்பாக பொலீசார் விளக்கம் தரவேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது. கடந்த 23ம் திகதி நிகழ்ந்த விசாரணையில் பொலீசாரின் விளக்கம் திருப்தியில்லாததினால் மேலதிக அறிக்கை தரவேண்டும் என கோரியதற்கிணங்க வழக்கு எதிர்வரும் 30ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புத்தர் சிலை நிறுவும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோதராகலிங்கம் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சிவநேசன் ஆகியோரும் பொதுமக்களுடன் இணைந்து பங்குபற்றியிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத்வீரசேகர தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் கடந்த 21ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றினார். “குருந்தூர் மலை” வழிபாட்டை தடுத்து நிறுத்தியதில் வடக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் பிரபாகரனின் நடவடிக்கைகளையே ஆதரித்து வருகின்றனர். பௌத்த சிங்கள மக்களின் பொறுமையை இயலாமையாக நினைக்க வேண்டாம். எமது பொறுமைக்கும் எல்லை உண்டு. 52 வீதமான தமிழ் மக்கள் சிங்கள மக்களுடனேயே வாழ்கின்றனர். நாட்டில் தமிழ் மக்கள் எந்தப் பிரதேசத்திலும் குடியமர முடியுமானால் சிங்கள மக்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. “குடியேற முடியாது என்று யாரும் தெரிவிக்க முடியாது” எனக் கூறியிருக்கின்றார்.
குருந்தூர் மலை பற்றி மகாவம்சத்தில் விபரிக்கப்பட்டுள்ளது என்றும் 2021ம் அகழ்வாய்வில் பல பௌத்த தொல்பொருட்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன என்றும் கூறியிருக்கின்றார்.
இந்த உரையாடலினூடாக மூன்று விடயங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
இதில் முதலாவது விடயம் பெரும்தேசியவாதிகள் அடிக்கடிகூறும் விடயம்தான். தமிழ் மக்களின் விவகாரம் சர்வதேச மயப்பட்ட நிலையில் கூட பழையபாணி அச்சுறுத்தல்களை கைவிட அவர்கள் தயாராக இல்லை. இப் பழையபாணி அச்சுறுத்தல்கள் புதிய சூழலுக்கு கொஞ்சம் கூடப் பொருந்தப்போவதில்லை. இது போன்ற அச்சுறுத்தல்களையெல்லாம் மீறித்தான் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் வரலாற்று ரீதியாக இடம்பெற்றுவந்தது
அஞ்சிய காலம் மலையேறிவிட்டது
தற்போதும் இடம்பெற்று வருகின்றது. இவற்றுக்கெல்லாம் அஞ்சிய காலம் மலையேறிவிட்டது.
இரண்டாவது தமிழ் மக்கள் தென்னிலங்கையில் குடியேறியதுபோல சிங்கள மக்களும் வடக்கில் குடியேறலாம் என்கின்றார். தமிழ் மக்கள் அரசியல் நோக்கில் திட்டமிட்டு தெற்கில் குடியேற்றப்படவில்லை. தொழில் நிமித்தம் தாங்களாகவே காணிகளை விலைக்கு வாங்கி குடியேறினார்கள். எவருடைய காணிகளையும் பலவந்தமாக அபகரிக்கவில்லை. ஆனால் தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றப்படும் சிங்கள மக்கள் கட்டமைப்பு சார் இன அழிப்பை மேற்கொள்வதற்காக திட்டமிட்டு அரசாங்கத்தின் நிதியுதவிகளுடன் குடியேற்றப்பட்டார்கள். இதற்குப் பின்னால் இருந்த பெருநோக்கம் தமிழ் மக்கள் ஒருதேசமாக இருப்பதை அழிப்பதே! இன்று இந்த அழிப்பின் கருவியாக அகிம்சையையும் சமாதானத்தையும் போதித்த புத்த பகவானும் பயன்படுத்தப்படுகின்றார்.
மூன்றாவது குருந்தூர் மலை ஒரு பௌத்த தொல்லியல் பிரதேசம் மகாவம்சம் அதனை நிரூபிக்கின்றது என்கின்றார். மகாவம்சம் பௌத்த நிறுவனம் ஒன்றினால் தனது மதத்தேவைக்காக எழுதப்பட்ட வரலாற்றுநூல். அதனை ஒரு தூய வரலாற்று ரீதியான ஒரு நூலாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஐரோப்பிய ஆய்வாளர்கள் இலங்கையின் வரலாற்று நூல்களுக்குள் என்ன இருக்கின்றது என்பதைவிட என்ன இல்லை என்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென கூறியிருந்தமை இங்கு குறிப்பிடவேண்டியதாகும்.
சரி அது தொல்லியல் பிரதேசமாக இருக்கலாம். அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டவையும் தொல்லியல் எச்சங்களாக இருக்கலாம். ஆனால் அவை பக்கச்சார்பின்றி உறுதிப்படுத்த வேண்டும். இலங்கை தொல்லியல் திணைக்களம் வரலாற்று ரீதியாக ஒரு ஆக்கிரமிப்புக் கருவியாகவே செயற்பட்டது. தற்போதும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. சர்வதேச ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் புகழ்பெற்ற தொல்லியலாளர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுடைய ஆலோசனைகள் பெறப்பட வேண்டும் என தமிழ்த்தரப்பு வலியுறுத்தியபோதும் அது கணக்கெடுக்கப்படவில்லை
.
முல்லைத்தீவு நீதிமன்றம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பீடத்தையும், குருந்தூர் மலையை ஒட்டிய கிராம மக்களையும் அகழ்வாய்வில் பங்குபற்றச் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தது. அது கவனத்தில் எடுக்கப்படாது தொல்லியல் திணைக்களம் ஒருபக்கச் சார்பாகவே அகழ்வுகளை செய்து முடித்திருக்கின்றது. இந்தச் செயன்முறை நீதிமன்றக் கட்டளையை மீறிய நீதிமன்ற அவமதிப்பு செயற்பாடாகும். தவிர இலங்கையில் முதலில் பௌத்தத்தை கொண்டுவந்தவர்கள் தமிழ் பௌத்தர்களே! எனவே இது ஏன் தமிழ் பௌத்தர்களால் பேணப்பட்ட இடமாக இருக்கக்கூடாது.
இதைவிட தொல்லியல் பிரதேசங்கள் நினைவிடங்களே தவிர வழிபாட்டிடங்கள் அல்ல. தொல்லியல் எச்சங்களை .