டாஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிக்கான அடுத்த ஓராண்டுக்கான ஜப்பான் நாட்டு உதவிக்கான ஒப்பந்தம் இன்று கைச்சார்த்திடப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதியில் குறித்த ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டது.
ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஸி கிடேகி குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு, நன்கொடையாளர் சார்பில் ஒப்பமிட்டார். அவருடன் ஜப்பான் தூதரகத்தின் 2ம் நிலை செயலாளர் இகராசி டோருவும் ஒப்பமிட்டனர்.
டாஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குனரும் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளருமான ஆனந்த சந்ரசிறி மற்றும் செயற்திட்ட முகாமையாளர் சுனில் ஆரியசேன ஆகியோர் ஒப்பமிட்டனர்.
குறித்த பணியினை முன்னெடுக்க 681,812 அமெரிக்க டொலருக்கான மானிய ஒப்பந்தமே இதன் போது கையொப்பமிடப்பட்டது.
டாஸ் நிறுவனத்திற்கு 19.06.2022 வரை அனைத்து நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் 15.82 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடி அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 106,304 மனிதருக்கு தீங்கேற்படுத்தும் கண்ணிவெடிகளும், 245 கனரக வாகனங்களுக் தெதிரான கண்ணிவெடிகளும், 26,019 வெடிக்கும் நிலையில் உள்ள எச்சங்களும், 164,115 சிறிய ஆயுத வெடிமருந்துகளும் கண்டு அழிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெளிவு படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் 13வது வருடமாக டாஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளிற்கு ஐப்பான் அரசாங்கத்தினால் நிதி உதவி வழங்கப்படுகின்றது. ஜப்பான் நாட்டின் நிதி உதவியினால் மாத்திரம் 6.4 சதுர கிலோமீற்றர் பரப்பு கண்ணிவெடி அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிகுதி பணிக்கான அடுத்த ஆண்டு நிதி உதவிக்கான ஒப்பந்தமே இன்று இரு தரப்பாலும் கையொப்பமிடப்பட்டது.
தொடர்ந்து மனித நேய பணியில் ஈடுபடும் குழுவினருடன் புகைப்படம் எடுக்கப்பட்டதுடன், செயற்பாடுகள் தொடர்பில் தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகளிற்கு விளக்கமளிக்கப்பட்டது.
பின்னர் களப்பணிகளை குறித்த குழுவினர் பார்வையிட்டதுடன், ஆகற்றப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.