
இந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இடம்பெற்ற கவனயூர்ப்பு போராட்டத்தின் பின் னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.



கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கான சங்க அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் முன்னெடுக்கப்பட்டது.
1932 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாதாந்தம் 30ம் திகதி கவனயூர்ப்பு போராட்டத்தினை முன் னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினமும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையு்ம, கோரிக்கைகளையும் உள்ளடக்கிய பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறிப்பிடுகையில்,
இந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது. யுத்த காலத்தில் கூட இவ்வாறான பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்ளவில்லை. ஆனால் இன்று எரிபொருள், பசளை, உணவு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றோம்.
எமது பிள்ளைகளை காணாமல் செய்த கோட்டாவின் அரசு இன்று எமக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடியை கொடுக்கின்றது. இவ்வாறான நிலையில் சர்வதேசம் தலையீடு செய்து எம்மையும், எமது பிள்ளைகளையும் மீட்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று 1932 நாட்களாக தீர்வின்றி போராடி வருகின்றோம். இந்த நிலையில் எமது தாய்மார் அன்றாட உணவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலை தொடராது எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.