அடகு கடையை உடைத்து 3 கோடியே 15 லட்சம் பெறுமதியான 177 பவுண் நகைகள் கொள்ளை! 6 மாதங்களின் பின் 4 பேர் கைது.. |

நகை அடகு பிடிக்கும் கடை ஒன்றினை உடைத்து 3 கோடியே 15 லட்சம் ரூபாய் பெறுமதியான 177 பவுண் தங்க  நகைகளை கொள்ளையடித்த 4 பேர் 6 மாதங்களின் பின்னர் நேற்றய தினம் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நோர்வூட் நகர பகுதியில் சேர்ந்த  மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே ஹட்டன் பொலிஸின், ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

2021 டிசம்பர் 09 ஆம் திகதியன்றே கடை உடைக்கப்பட்டு கொள்ளை, தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த கடையில் சுமார் 10 வருடங்களாக வேலை செய்த பெண்னொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவரது கைரேகை அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்திய பெண்ணின் கைரேகையும் மீட்கப்பட்ட பொருட்களில் உள்ள கைரேகையும் ஒரே மாதிரியானவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை வேட்டை ஆரம்பமானது. களவாடப்பட்ட நகைகளை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளையிலேயே,  சூத்திரதாரிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். 54 தங்க சங்கிலிகள், 757 தோடுகள், 177 பெண்டனர்கள், 18 வளையல்கள், 1 தங்க நெக்லஸ் உட்பட மேலும் சில தங்க நகைகளே கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. 

கைதானவர்கள், சட்ட நடவடிக்கைகளுக்காக ஹட்டன், நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (01) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews