காலியில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களின் சுவரொட்டிகளை அகற்ற இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி, கட்டளை அதிகாரி – காலி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்ட இரண்டு சட்டத்தரணிகளினால் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.
காலி கோட்டையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்த “கோட்டா கோ ஹோம்” மற்றும் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இராணுவத்தினர் அகற்றி பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடும் காலி கிரிக்கெட் மைதானத்தை அண்மித்த கோட்டையில் இருந்து அரச எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களின் சுவரொட்டிகளை அகற்ற இராணுவத்தினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின், “இதற்காக இராணுவத்தை களமிறக்குவது அவசியமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் கிரிக்கெட் என்பது மிகப் பெரிய விடயம் என்று எனக்குத் தெரியும், ஆனால் அது இராணுவத்தை அனுப்ப வேண்டிய தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையா? அமைதியான எதிர்ப்பாளர்கள் என்ன சட்டத்தை மீறுகிறார்கள்?, ”என்று அவர் ஒரு கேள்வி எழுப்பினார்.