சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் வழங்க மறுத்த பொலிஸ் அதிகாரி..! சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை காட்டம்… |

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு மறுப்பு தெரிவித்த பொலிஸ் அதிகாரி தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

ஒரு சில பொலிஸ் உத்தியோகத்தர்களின் இவ்வாறான செயற்பாடுகள் ஒட்டுமொத்த பொலிஸார் மீதும் காணப்படும் நன்மதிப்பை இல்லாமலாக்கி விடும் என்றும் இது நாட்டுக்கு அவமானகரமானதொரு செயற்பாடாகும் என்றும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோவினால் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு இன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில்,

காலியில் சுற்றுலாப்பயணிகள் இருவருக்கு எரிபொருள் வழங்குவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மறுத்தமை தொடர்பான காணொளி பதிவு சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பகிரப்பட்டுள்ளது. குறித்த காணொளியை இலங்கையர்கள் மாத்திரமின்றி பல மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்களும் பார்க்கக் கூடும்.

எனவே இதுபோன்ற செயற்பாடுகள் ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மேலும் பின்னோக்கிச் செல்ல அனுமதிக்கும். ஒரு சில பொலிஸ் உத்தியோகத்தர்களின் இதுபோன்ற செயற்பாடுகள், ஒட்டு மொத்த பொலிஸார் மீதுள்ள நன்மதிப்பையும் இல்லாமலாக்கும்.

எனவே நீங்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews