கதிர்காமம் மற்றும் உகந்தை முருகன் ஆலயங்களின் கொடியேற்றம் இம்மாதம் 29 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம் எ.டக்ளஸ் தெரிவித்தார்.
யாத்திரை தொடர்பாக உகந்தை முருகன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற அரச திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்ட உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்
லாகுல பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா தலைமையில் ஆலய வண்ணக்கர் எம்.டி.சுதுநிலமே பங்களிப்போடு இடம்பெற்ற இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்டஅரசாங்க அதிபர் ஜே.எம் எ. டக்ளஸ் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பொத்துவில் பிரதேச செயலாளர் சந்துருவான் அனுருத்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உஷா பெரேரா மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பாணமை விகாராதிபதி ஆலய பிரதம குருசிவ ஸ்ரீ.க.கு.சீதாராமகுருக்கள் உதவிக்குரு சிவஸ்ரீ ஆ.கோபிநாத் சர்மா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீக.கு.சீதாராமகுருக்கள் நடாத்தி வைத்ததுடன் தொடர்ந்து ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கதிர்காம பாத யாத்திரைக்கான குமண ஊடான காட்டு வழிப்பாதை இம்மாதம் 22ஆம் திகதி காலை உகந்தை முருகன் ஆலயத்தில் இடம்பெறும் பூஜையை தொடர்ந்து 7 மணியளவில் திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி மூடப்படும் எனவும் இக்காலத்தில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்படும் பாதை பிற்பகல் 3 மணிக்கு மூடப்படும் எனவும் குறிப்பிட்டனர்.
அதுபோல் பாதயாத்திரிகர்களுக்கான பாதுகாப்பு சுகாதார சேவைகள் குடிநீர் வசதி போன்றவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் பாதயாத்திரிகர்கள் சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மத்தியில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள உதவிகளை பாதயாத்திரிகள் முறையாக பயன்படுத்திகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த இரு வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக தடைப்பட்டிருந்த நிலையில் இம்முறை பாதயாத்திரைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது,