எரிபொருள் பெற்று தர நடவடிக்கை எடுத்து தரக்கோரி நேற்று 04/07 கிளிநொச்சி மாவட்டத்தில் பணி புரியும் கிராம சேவையாளர்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் கிராம சேவையாளர்கள் கலந்துரையாடலில் நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பொது மக்களிற்கான சேவையை உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும், பொதுமக்களிற்கான சேவையை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாது உள்ளதாகவும் அரசாங்க அதிபரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் ஏனைய அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவதர்களிற்கான எரிபொருள் பங்கீடு போன்று, கிராம மட்டத்தில் மக்களிற்கான சேவையை உரிய காலப்பகுதியில் முன்னெடுக்க தமக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது அரசாங்க அதிபரிடம் அவர்கள் கோரியிருந்தனர்.
இதன்போது பதிலளித்த அரசாங்க அதிபர், இவ்வாறான பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றீர்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடமி்ல்லை. ஆனால் இதுவரையில் பொது நிர்வாக அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்தர்கள், அத்தியாவசிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்களா என்ற விடயம் நேற்றுவரை இருக்கவில்லை.
ஆனால் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பின் பிரகாரம் நாங்களும் அதற்குள் உள்வாங்கப்படுவதாக நம்புகின்றேன். அது மாத்திரமல்லாது, வேலையை கொண்டு செல்வதற்கு எரிபொருள் என்பது அடிப்படையான விடயமாகும்.
ஆனால் மாவட்டத்தில் பெற்றோல் என்பது மிக குறைந்த அளவில்தான் இருக்கின்றது. அதேவேளை அருகில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய. தினத்தைவிட மிக குறைந்த அளவாக உள்ளது. அதேவேளை கடந்த வாரம் சுகாதார துறையினருக்காக எரிபொருள் கிடைத்திருந்தது.
அவ்வாறு வந்த எரிபொருளில் மிகுதி இருந்தால் நீங்கள் எதிர்பார்ப்பது போன்றில்லாது, 1 லீட்டராக தந்து ஆரம்பித்து விடலாம். அவ்வாறு பெற முடிந்தால் பெற்று தர முடியும். ஆனால் அடுத்து எரிபொருள் கிடைக்குமாக இருந்தால் கட்டாயமாக பெற்றுத்தர முடியும். ஆனால் நேற்று கதைத்த வரையில் பெற்றோல் கிடைக்கும் என்பதற்கான உறுதி கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலின்போது எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் கிராம சேவையாளர்கள் முன்னிலைப்படுத்தி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்டத்தில் காணப்படும் எரிபொருளை ஓரளவேனும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச அதிபர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.