கிளிநொச்சி தனியார் பேருந்து சேவைக்கு தினமும் 1300 லீட்ட்டர் டீசல் வழங்குவதென கலந்துரையாடலில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று பகல் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன், கிளிநொச்சி பொலிஸ் உயர் அதிகாரிகள், சாலை முகாமையாளர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன் போது, கிளிநொச்சி பேருந்து சாலைக்கு எடுத்துவரப்படும் டீசல் எரிபொருளில் அத்தியாவசிய சேவைக்காக 2000 லீட்டரும், தனியார் பேருந்து சேவைக்காக 1300 லீட்டரும், மிகுதி அரச பேருந்து சேவைக்காகவும் பயன்படுத்தும் வகையில் தீர்மானம் எட்டப்பட்டது.
அதற்கமைவாக, அரச பேருந்து சேவை மற்றும் தனியார் பேருந்து சேவையினருக்குமிடையிலான முறுகல் நிலை முடிவுக்கு வந்துள்ளது.
குறித்த எரிபொருள் வினியோகத்தின் போது மாவட்ட செயலக அலுவலர் ஒருவர் கண்காணிப்பில் ஈடுபடுவார் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.