இன்று மாலைக்குள் முக்கிய முடிவு எடுக்கவுள்ள கோட்டாபய.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய அரசியல் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதன் காரணமாக அரசியல், அதிகார மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று சனிக்கிழமை மாலைக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய அரசியல் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுடன் கலந்துரையாடி, தீர்மானம் எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபருடன் பிரதமர் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

அத்துடன், இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, அரசியலமைப்பின் பிரகாரம் தீர்விற்காக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகரிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைவர்களின் சிறப்பு கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொழும்புக்கு வந்த மக்கள், இன்று காலை வீதித்தடைகளை உடைத்து, ஜனாதிபதி மாளிகை மற்றும் அரச தலைவரின் செயலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews