தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலக வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையிலான பல சம்பவங்கள் இலங்கையில் நேற்றைய தினம் பதிவாகியது.
வன்முறைகள் ஏற்படுவதைத் தவிர்த்து ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தால் பலம் பொருந்திய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும் மண்டியிட நேர்ந்தது.
வெற்றிகரமான மக்கள் எழுச்சி போராட்டமாக நேற்றைய போராட்டம் அமைந்திருந்தது.
இந்த போராட்டங்களினூடாக பல வெற்றிகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாராதூரமான பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து இருந்த போதிலும் அதனை மறந்து செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராகவே இந்த மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டங்களுக்கான அழைப்பும் விடுக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்கும் மேலாக பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது உண்மையில் பாரிய வெற்றியாகும். இறுதியாக பதுங்குக்குழிக்குள் இருந்த மக்களை எதிர்கொள்ள முடியாத ஜனாதிபதியை வெளியேற்றும் ஓர் இடத்துக்கு இந்த மக்கள் போராட்டம் தீவிரத் தன்மையை அடைந்திருந்து.
நேர்மறையான வழியில் பிரதமராகியவரையும் வீட்டுக்கு அனுப்பும் வகையில் மக்கள் போராட்டம் உச்சம்பெற்றது.
மக்கள் சக்தியால் இவை அனைத்தும் நடந்ததை நாம் அனைவரும் அவதானித்தோம்.
இந்த மக்கள் போராட்டம் குறித்து நாடு என்ற முறையில் நாம் பெருமைக்கொள்கின்றோம். வன்முறைகளின்றி மிகவும் அமைதியான மக்கள் போராட்டத்தினால் பலம் வாய்ந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக நேற்றைய போராட்டம் அமைந்திருந்தது.
உலக வரலாற்றில் இடம்பிடித்த போராட்டமாகவே இந்த போராட்டம் அமைந்துள்ளது.