இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நியாயமான விசாரணை நடத்தி பாரபட்சம் பாராமல் தண்டனை வழங்க வேண்டும்.
இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நீதியால் ஆளப்படும் ஒரு சமூகத்துக்காக ஒரு சிவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர்கள் ஒழுக்கமும், நாகரிகமும் கொண்டவர்கள் என்றும், அதன் உன்னத இலக்குகளை ஒருபோதும் காட்டிக் கொடுக்காத அளவுக்கு நாகரீகமாகவும் இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால் அந்த போராட்டம் என்ற போர்வையில் சில சந்தர்ப்பவாத மற்றும் நாசகார கும்பல்களால் மக்களின் வாழ்க்கையை குழப்பும் சொத்துக்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களை நிபந்தனையின்றி எதிர்ப்பதாக எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் பிரஜைகள் மற்றும் ஏனையோர் வன்முறைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்ததுடன், இது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வன்முறையற்ற அமைதியான நாட்டிற்கான, பிரஜைகளின் போராட்டத்திற்கு கரும்புள்ளிகளைச் சேர்க்க முயலும் வெளிச் சக்திகள் தொடர்பில் முழு சமூகமும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது மிகவும் நெருக்கடியான தருணம் என்பதால், ஜனநாயகத்தை பாதுகாத்து, நல்லிணக்கத்தை மனதில் வைத்து அமைதியாகவும், நிதானமாகவும் செயற்படுமாறு அனைத்து மக்களையும் அன்புடன் அழைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.