ஆயுதம் தாங்கிய படையினர் முன்னே மக்கள் செல்லும் காட்சியை ஒளிப்பதிவு செய்தமையை ஏற்க மறுத்து படையினர் கண்மூடித்தனமான முறையில் ஊடகவியலாளர்களை தாக்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிராயுத பாணியாக செயற்பட்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்.
ஊடகக் கடமையினை சுதந்திரமாக மேற்கொள்வதை தடுத்து ஊடகவியலாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடாத்துவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இலங்கையில் இதுவரை காலமும் அவ்வப்போது ஊடகவியலாளர்கள் மீது பல்வேறு கொலை சம்பவங்களும். காணாமலாக்கப்பட்ட சம்பவங்களும், பதிவாகியுள்ளன.
இவற்றுக்கு இதுவரையில் நீதி கிடைக்காத நிலையில் போராடிக் கொண்டு தொடர்ந்து தமது கடமையினை மேற்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்கதையாக தாக்குதல்கள் மேற்கொள்வதை உடன் நிறுத்த வேண்டும்.
ஊடகவியலாளர்கள் இது போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் தங்களது பொறுப்பை உணர்ந்து செயற்படுகின்ற அதே நேரத்தில், தங்களுடைய பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் மாறி மாறி வருகின்ற அரசாங்கத்தில் இது தொடர்ந்து கொண்டே செல்கின்றன. எனவே நேற்றையதினம் கொழும்பில் வைத்து தாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும், அதற்கு அரசாங்கம் உரிய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் தராதரம் பாராது தாக்குதல்தாரிகளைக் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தி பாதிக்கப்பட் ஊடகவியலாளர்களுக்கு நீதியையும். இழப்பீடுகளையும் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.