கொரோனா தொற்று மற்றும் டெல்டா வகை திரிபு வைரஸ் தொற்றினால் நாட்டில் 1.5 வீதமானோர் உயிரிழப்பதாக அரசு அறிவித்திருக்கும் நிலையில், நாட்டை முடக்குவது தொடர்பாக அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதன்படி கொரோனா தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை நூறை தாண்டியுள்ளதால் உடனடியாக பொதுமுடக்கம் ஒன்றுக்கு செல்வதே சிறந்ததென அரச உயர்மட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எந்நேரத்திலும் நாட்டை முடக்குவதற்கான அறிவிப்பு வெளிவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை ,டெல்ட்டா திரிபு பரவும் நிலையில், மக்கள் சீக்கிரமாக தடுப்பூசியை பெறுமாறும் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் நடமாடவேண்டாம் எனவும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டே சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டில் 1.5 சதவீதமான கொரோனா நோயாளர்கள் உயிரிழப்பதாகவும்,
அதிகளவானோர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அனைவரும் முதலில் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும், உலகலளவில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களே உயிரிழக்கின்றனர்.
அத்தியாவசிய காரணங்கள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம், சன நெரிசல் உள்ள திருமண, மரண மற்றும் வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதை முழுமையாக தவிர்க்கவும் , பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் கட்டாயமாக அணியவும்,அறைகள், விடுதிகள், மின்தூக்கி, வாகனம் போன்றவற்றில் நெரிசலாக பயணிப்பதை தவிர்க்கவும், அவ்வப்போது சவர்க்காரம் இட்டு கைகளை கழுவவும் , தனிமனித இடைவெளியாக 2 மீற்றர் தூரத்தை பின்பற்றவும் , தொற்றாநோய்கள் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.
எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது