கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நேரத்தில் அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அழைப்பு விடுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“நாட்டின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புடன் இந்த தருணத்தை அணுகுமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் தீர்வுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அனைத்து வன்முறைகளையும் அமெரிக்கா கண்டிப்பதுடன், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் உள்ள அமெரிக்க துாதரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமது சேவைகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு ரத்துச் செய்துள்ளது.
மிகுந்த எச்சரிக்கையுடன், தூதரகம் புதன்கிழமை பிற்பகல் சேவைகளையும் (அமெரிக்க குடிமக்கள் சேவைகள் மற்றும் என்ஐவி பாஸ்பேக்) மற்றும் வியாழக்கிழமையின் அனைத்து தூதரக சேவைகளையும் ரத்து செய்வதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஏற்படும் எந்தவொரு சிரமத்திற்கும் தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், மேலும் ரத்து செய்யப்பட்ட அனைத்து சந்திப்புகளையும் மீண்டும் திட்டமிடவுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.