வடமராட்சி தனியார் பேருந்து சேவை வழமைக்கு…….!

கடந்த ஐந்து நாட்களாக பருத்தித்துறை சாலையிலிருந்து தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்காமையால் வடமராட்சியில் தனியார் போக்குவரத்து சேவை  இன்று காலை முதல் சேவை முற்று முழுதாக முடங்கியிருந்த நிலையில் பருத்தித்துறை போலீசாரின் தலையிட்டால்  சற்றுமுன்னர் முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
தனியார் போக்குவரத்து  சேவைக்கு அந்தந்த சாலைகளிலிருந்து டீசல் வழங்கும் நடைமுறை  இருக்கின்ற போதும் பருத்தித்துறை சாலை முகாமையாளரால் கடந்த ஐந்து நாட்களாக டீசல் வழங்கப்படாமையாலேயே இன்று பருத்தித்துறை யாழ்பாணம்,பருத்தித்துறை கொடிகாமம் சேவைகள் முற்றிலும் முடங்கியது.
இந்நிலையில் த பருத்தித்துறை சாலை முன்பாக தனியார் பேருந்துகளை நிறுத்தி தனியார் பேருந்துகளுடன் உரிமையாளர்கள், நடத்துநர்கள், சாரதிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் பருத்தித்துறை போலீசார் தலையிட்டு பருத்தித்துறை சாலை முகாமையாளர் ஜீவானந்தம் அவர்களுடன் தனியார் பேருந்து சங்கம் ஆகியோர் நடாத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தமக்கு வருகின்ற டீசலில் முன்னுரிமை அடிப்படையில் தனியார் பேருந்துகளுக்கு வழங்குவதென உறுதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது தனியார் போக்குவரத்து சேவையினருக்கு டீசல் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதுடன் தனியார்  போக்குவரத்து சேவையும் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
இதில் வடமராட்சி தனியார் பேருந்து போக்குவரத்து சேவை சங்கத்தை சேர்ந்த சுமார் அறுபது போக்குவரத்து சேவை பேருந்துகளும், அதன் உரிமையாளர், சாரதி, நடத்துனர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவு சாலையிலிருந்த வந்த பேருந்து ஒன்றுக்குள்  210 litter கொள்ளளவு கொண்ட   கொள்கலன்களுக்கு  டீசல் நிரப்பி  சென்றதையும் எம்மால் அவதானிக்க முடிந்ததுடன் இது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது எதிர்பையும் வெளியிட்டனர்.
மேலும் குறித்த பருத்தித்துறை சாலையில் பல தனியார் வாகனங்களுக்கு டீசல் நிரப்புவதாகவும், குற்றஞ்சாட்டும் தனியார் போக்குவரத்து சேவை சங்க பிரதிநிதிகள் தமக்கும் பருத்தித்துறை சாலை முகாமையாளருக்கும் தொடர்ச்சியாக தொழில்சார் பிரச்சினைகள் இருந்துகொண்டு இருக்கின்ற நிலையில் தற்போது குறித்த பருத்தித்துறை சாலை முகாமையாளர் தம்மை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் சில வாரங்களுக்கு முன்னர் குறித்த சாலை முகாமையாளர் தனியார் பேருந்து சேவை வாகனங்களுக்கு டீசல் வழங்குவதில் வேண்டுமென்று இழுத்தடிப்பு செய்து வந்ததாக குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அன்றைய தினம் பருத்தித்துறை போலீசாரின் முன்னிலையில் பருத்தித்துறை சாலை முகாமையாளர் தனியார் சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு 750 லீற்றர் டீசல் வழங்குவதாக ஒப்புக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக டீசல் வழங்கப்படாத நிலையிலேயே இன்று இப்போராட்டம் இடம் பெற்றது.
இவ்வாரம் பருத்தித்துறை சாலைக்கு இரண்டு தடவைகள் 6600 லிட்டர் வீதம் 13000 லீட்டர் டீசல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டது குறிப்பிட தக்கது
வடமராட்சி

Recommended For You

About the Author: Editor Elukainews