ஒரு மாதமாக எரிபொருள் கிடைக்க வில்லை மிகுந்த துன்பங்களை அனுபவிக்கிறோம்! வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்.

ஒரு மாத காலமாக எரிபொருள் கிடைக்காமையால் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றோம் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

எமது கடல் தொழிலுக்கு தேவையான எரிபொருள் வழங்கி இன்றுடன் 47 நாட்கள் ஆகின்றன.ஆரம்பத்தில் 20 லீற்றர் எரிபொருள் தந்தார்கள்.இன்றுடன் 47 நாட்கள் ஆகின்றது.எமது குடும்பங்கள் பற்றி ஒருவருக்கும் அக்கறை இல்லை.மாதம் மாதம் அவர்களுக்கு சம்பளம் வரும்.மக்களுக்கு அவ்வாறு இல்லை.

பெற்றோல்,டீசல் கூட கிடைக்கிறது ஆனால் மண்ணெண்ணெய் பற்றிய கதையே இல்லை.கறுப்புச் சந்தையில் 1300 ரூபா வரையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது.கட்டுமரம் உள்ள சிலர் தொழிலுக்கு செல்கின்றனர்.ஏனையவர்கள் கடல்கரையில் படகை கவிழ்த்துவிட்டு கடலைப் பார்த்துகொண்டு இருக்கின்றனர்.

இந்த இக்கட்டான நிலையிலும் கூட களவாக அட்டை பிடிக்கப்படுகிறது.அனுமதி பெற்றவர்கள் எரிபொருள் இல்லாமல் உள்ளனர்.ஆனால் சட்டவிரோத அட்டைத் தொழில் தாராளமாக நடைபெறுகிறது.அவர்களுக்கு எங்கிருந்து எரிபொருள் கிடைக்கிறது என்று தெரியவில்லை.

இது பற்றி கடல் தொழில் அமைச்சரிடம் நாம் கேட்டோம்.20 ஆம் திகதிக்கு பின்னர் இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு எரிபொருளை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.நாம் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளோம் இதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews