ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, எதிர்க்கடச்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.
எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தனது ஆதரவினை டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்கப்போவதாகவும் இன்று காலை அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, டலஸ் அழகப்பெரும,ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதில் தமிழர்களுக்கு உள்ள நன்மைகள்,தீமைகள் தொடர்பில் தீவிரமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக இருந்தால் அவரிடத்தில் எழுத்துமூலமான உறுதிப்பாடு பெறப்பட வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்ட நிலையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசியல் கைதிகள் விடுதலை, ஆக்கிரமிப்பு பிரச்சினைகள் உள்ளிட்ட உடனடியாக தீர்க்கவல்ல பிரச்சினைகள் தொடர்பில் காலவரையறையுடனான உறுதிப்பாடு அவசியம் என்றும் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,தனது இல்லத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும மற்றும் அவரை முன்மொழிந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை நேரில் வருமாறு அழைப்பு விடுத்த நிலையில்,இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.