கிளிநொச்சி கோரக்கன் கட்டு விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாபதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் நுாறு வீதமான நிலப்பரப்பில் சிறு போக நெற்செய்கை மேற்கொண்டுள்ளதுடன் இதுவரை இரணைமடுக்குளத்தின் கீழ் உட்படாத கோரக்கண் கட்டு பகுதி பரிட்சார்த்தமாக உள்வாங்கப்பட்டு இம்முறை சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு புதிதாக உள்வாங்கப்பட்ட கோரக்கன் கட்டு பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எந்த விவசாயிகளுக்கும் பயிர்செய்கைகான காணிகள் வழங்கப்படாது குறித்த பகுதி கமக்கார அமைப்பின் தலைவர் மற்றும் அவரது மனைனவி பிள்ளைகள் உறவினர்கள் சகோதரர்கள் மாத்திரமே முற்று முழுதாக சிறுபோக செய்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அவர்கள் வாழ்வாதாரத்துக்காக எந்த விதமானபயிர் செய்கைகளையும் மேற்கொள்வதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லையென்பதையும் மா வட்ட அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கையொப்பமிட்ட மகஜர்களை பிரதி நீர் பாசன பொறியியலாளர் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் மாவட்ட அரசு அதிபர் ஆகியோருக்கு நேற்றைய தினம் (19-07-2022) கையளித்துள்ளனர்
இதனையடுத்து மாவட்ட பயிர்ச் செய்கை குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் மகஜரை பொறுப்பேற்றுக் கொண்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கிளிநொச்சி கோரக்கண் கட்டு விவசாயிகளால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து அது தொடர்பிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்செய்கைக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பட்டியலில் குறித்த தமக்கார அமைப்பினுடைய தலைவர் அவரது துணைவியார் பிள்ளைகள் மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளடங்களாக 15க்கு மேற்பட்டோர் உடைய பெயர் விவரங்கள் குறித்த பட்டியலில் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து அதன் பிரதியெனன்றினையும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது