காலிமுகத்திடல் போராட்டத்தின்; முதலாம் கட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி பதவிவிலகாமல் மாலைதீவுக்கு சென்றிருந்தார். பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்காவை நியமித்திருந்தார். தற்போது சிங்கப்பூர் சென்று தனது பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்திய பின் தனது இராஜினமாக்கடிதத்தை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி கோட்டபாயா துறைசார்ந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று தனக்கான திட்டங்களை நகர்த்தியிருக்கின்றார் போலத் தெரிகின்றது. காலி முகத்திடலில் வெற்றிக் கொண்டாட்டங்களும் இடம் பெற்றிருக்கின்றன
இரண்டாவது கட்டப் போராட்டம் ரணிலின் ஆட்சிக்கு எதிரானது.
போராட்டத்தின் முதலாம் கட்டம் முடிவடைந்துள்ளதால் தந்திரோபாய ரீதியாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், என்பவற்றிலிருந்து வெளியேறியுள்ளனர். இரண்டாவது கட்டப் போராட்டம் ரணிலின் ஆட்சிக்கு எதிரானது. இங்கு ரணில் ஆட்சியை மட்டுமல்ல அவருக்கு பின்னாலுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடனும் போராட வேண்டும். இதற்கு வேறுபட்ட மூலோபாயங்களும் தந்திரோபாயங்களும் தேவை.
அணி சேர்க்கைகளும் வேறுபடும் 100 நாட்களுக்கு மேல் போராடிய போராட்டக்காரர்களுக்கு சற்று ஓய்வும் தேவையாக உள்ளது. இந்த வகையில் பின்வாங்கல் புத்திசாலித்தனமான முடிவேயாகும்.
ரணிலை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு கோட்டபாய கடும் எதிர்ப்பு.
ரணிலை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு கோட்டபாய கடும் எதிர்ப்பைத் தெரிவித்த போதும் மகிந்தராஜபக்ச ஜனாதிபதியாக ரணில் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ரணில் மூலம் தான் ராஜபக்சாக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் உறுதியாகக் கூறியிருக்கின்றார். இதன் பின்னரே ரணிலை நியமிக்கும் முடிவுக்கு ஜனாதிபதி வந்திருக்கின்றார். மொட்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் ரணில் தான் தங்களுக்கு பாதுகாப்பு எனக் கருதி ஆதரிப்பதற்கு தயாராக உள்ளனர்.
19ம் திகதி ஜனாதிபதிக்கான வேட்பு மனுத்தாக்கல் இடம் பெற்ற போது ரணில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இன்று 20ம் திகதி வாக்கெடுப்பு நடைபெறும் போது ரணில் வெற்றியடைவதற்கே வாய்ப்புக்கள் உள்ளன. ரணில் 123 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக கூறியிருக்கின்றார். மொட்டு கட்சியினருக்கும் ரணிலை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ரணிலுக்கு உள்நாட்டில் செல்வாக்கு இல்லாத போதும் சர்வதேச அளவில் வேறு எவருக்கும் இல்லாத செல்வாக்கு அவருக்குள்ளது. அவர் மேற்குலகின் செல்லப்பிள்ளையாக இருப்பதால் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் அவரை ஆதரிப்பதற்கு தயாராக இருக்கின்றன. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றனவும் ஆதரிக்க தயாராக இருக்கின்றன. ரணிலை நியமிப்பதன் மூலம் ராஜபக்சாக்களுக்கும் பிடி இருக்கின்றது ரணிலுக்கும் பிடி இருக்கின்றது. ரணிலின் அரசியல் இருப்பு ராஜபக்சாக்களில் தங்கியிருக்கின்றது. அதேவேளை ராஜபக்சாக்கள் உட்பட மொட்டு கட்சியினரின் பாதுகாப்பு ரணிலில் தங்கியிருக்கின்றது. போராட்டக்காரர்களினால் ஜனாதிபதியை முழுமையாக பதவிநீக்க முடியாததினால்தான் பூரண வெற்றி கிடைக்கவில்லை எனக் கூறலாம்
போராட்டக்காரர்களைப் பொறுத்தவரை கறையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த நிலைதான்.
ரணிலின் பதவி ஏற்போடு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த சிங்கள உயர்வாக்கம் போராட்ட ஆதரவிலிருந்து கழரத் தொடங்கியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் என்பவற்றிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறி அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றது. போராட்டக்காரர்களைப் பொறுத்தவரை கறையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த நிலைதான்.
காலி முகத்திடல் போராட்டக்காறர்கள் சிலர் யாழ்ப்பாணம் வந்து தமிழ்ச் செயற்பாட்டாளர்களிடம் பேசியபோது தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் அவர்களிடம் கேட்ட கேள்வி “கோத்தாவை வீட்டுக்கு அனுப்பிய பின் அடுத்தது என்ன?” என்பது தான். அதற்கு போராட்டக்காரர்களிடம் உறுதியான பதில் இருக்கவில்லை. கோத்தாவை வீட்டுக்கு அனுப்பி ரணிலுக்கு முடி சூடுவதற்காக நாம் போராடவில்லை. இந்த அரச முறைமை முழுமையாக மாற்றுவதற்குத்தான் போராடுகின்றோம் எனக் கூறியிருந்தனர்.
இந்த நெருக்கடி என்பது பெரும் தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெரும் தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள், புவிசார் அரசியல்காறரான இந்தியா, பூகோள அரசியல்காறர்களான அமெரிக்கா, சீனா, என்பவற்றின் நலன்களுக்கிடையிலான மோதல் தான். எனவே நெருக்கடிக்கான தீர்வு என்பது இந்த நலன்கள் சந்திக்கின்ற புள்ளிதான். அந்தச் சந்திக்கும் புள்ளி ஏதோ ஒரு வகையில் இதில் சம்மந்தப்பட்ட ஆறு தரப்பினரையும் திருப்தி செய்வதாக இருக்க வேண்டும்.
ஆனால் தற்போதைய ரணிலின் பதவியேற்பு சம்பந்தப்பட்ட ஆறு தரப்பினரையும் திருப்திசெய்தது எனக் கூற முடியாது.
பூகோள அரசியல் காறர்களில் ஒருவரான அமெரிக்காவிற்கு மட்டும் முழுமையான வெற்றி கிடைத்துள்ளது. பெரும் தேசியவாதத்தின் லிபரல் பிரிவு ரணில் தரப்பு, சஜித் தரப்பு எனப் பிரிந்து கிடக்கின்றது. இதில் சஜித் தரப்புக்கு தோல்விதான். எனவே லிபரல் தரப்பிற்கு அரை வெற்றியே கிடைத்தது எனக் கூறலாம்.
பூகோள அரசியல் காறர்களில் ஒருவரான சீனாவிற்கு இது தோல்வியே! தோல்வியடைந்த தரப்பு சும்மா இருக்கப்போவதில்லை. எனவே போராட்டக்காரர்களுக்கும் அவர்களுக்கு பின்னால் நிற்கின்ற தொழில் சங்கங்களுக்கும் சீனாவே நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறப்படுகின்றது. ஏற்கெனவே துறைமுக கிழக்கு முனைய போராட்டங்களின் போதும் சீனாவே எதிர்ப்பு தொழிற்சங்கங்களுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்வதைத் தவிர சீனாவிற்கு வேறு தெரிவில்லை.
புவிசார் அரசியல்காறரான இந்தியாவிற்கு தனது பிராந்தியத்தில் அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்துவது கொஞ்சம் கடுப்புத்தான். ரணில் மேற்குலக முகம் கொண்டவர் என்பதும் அதற்கு அதிர்ப்தி தான். இரண்டு காரணங்களுக்காக தனது அதிர்ப்தியை சற்று அடக்கி வாசிக்கின்றது. ஒன்று தனது கொல்லைப்புறத்தில் அமைதியின்மை உருவாகுவதை அது விரும்பவில்லை. இரண்டாவது சீனாவின் ஆதிக்கத்திற்கு முகம் கொடுக்க இந்தோ – பசுபிக் மூலோபாயக் கூட்டில் அதுவும் இணைந்திருக்கின்றது. அந்தக் கூட்டு பலவீனப்படுவதையும் அது விரும்பவில்லை.
பெரும்தேசியவாதத்தின் இனவாதப் பிரிவு மொட்டுக் கட்சி, சுயாதீனப் பாராளுமன்றக் குழு, ஜே.வி.பி என்பவற்றை உள்ளடக்கியது. இதில் மொட்டுக் கட்சி தற்காப்பு நிலையை எடுத்துள்ளது. ஏனையவற்றிற்கு தோல்விதான். இந்த இனவாதப்பிரிவில் உள்ள மகாநாயக்கர்களுக்கும் ஒரு வகையில் தோல்விதான்
மனோகணேசன் கொடுத்த குரலைக்கூட சுமந்திரனோ, சாணக்கியனோ கொடுக்கவில்லை.
இந்த நெருக்கடி மைதானத்தில் சம்பந்தப்பட்டவர்களில் ஒரு தரப்பைத் தவிர சகல தரப்பினரும் தங்கள் தங்கள் நலன்களிலிருந்து விளையாடியிருந்தனர். சில தரப்பிற்கு முழு வெற்றியும், சில தரப்பிற்கு அரை வெற்றியும், வேறுசில தரப்பிற்கு அரைத் தோல்வியும், சில தரப்பிற்கு முழுத் தோல்வியும் கிடைத்திருந்தன.
ஆனால் ஒரு தரப்பு மட்டும் நெருக்கடி மைதானத்தில் விளையாடுவதற்கு கௌரவமான இடமிருந்த போதும் மைதானத்தில் விளையாடவேயில்லை. அது தமிழ்த்தரப்புத்தான். தமிழ்த்தரப்பில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பொறுப்பை ஒப்படைக்க கூட்டமைப்பு தனி நபரான சுமந்திரனிடம் பொறுப்பை ஒப்படைத்தது. சுமந்திரன் தனித் தரப்பாக விளையாடுவதற்கு பதிலாக தமிழ் மக்களின் நலன்களைக் கைவிட்டுவிட்டு பெரும்தேசியவாத லிபரல் தரப்பின் ஒருசாராருக்காக விளையாடினார். தற்போதும் விளையாடிக்கொண்டிருக்கிறார். இந்த நெருக்கடி மைதானத்தில் தாயகத்திற்கு வெளியே இருக்கும் மனோகணேசன் கொடுத்த குரலைக்கூட சுமந்திரனோ, சாணக்கியனோ கொடுக்கவில்லை
.
போராட்டக்காரர்கள் அரசியல் கட்சிகள் சந்திப்பின்போது மனோகணேசன் “இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம் தீர்;க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதற்குப் பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு தேட முடியாது” எனத் தெளிவாகக் கூறியிருந்தார். சுமந்திரனோ ஜனாதிபதி நியமனம் பற்றிய அரசியல் யாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போராட்டக்காறர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். தமிழ் மக்கள் விவகாரம் பற்றி வாயே திறக்கவில்லை.
கோட்டபாயாவை, மகிந்தரை, பசில் ராஜபக்சவை பதவிநீக்குவதற்கு அரசியல் யாப்பிற்கு வெளியிலான அணுகுமுறை தேவை. ஜனாதிபதி நியமனத்திற்கு மட்டும் அரசியல் யாப்பு வழிமுறை தேவைதானா? என்ற கேள்வியை முறையாக கேட்பதற்கு யாரும் இருக்கவில்லை.
போராட்டக்காரர்களுக்கு தற்போதுள்ள ஒரேயொரு ஆறுதல் சஜித்தரப்பு, சுயாதீனப் பாராளுமன்றக்குழு, தமிழ்த்தரப்பு, சீனா என்பவை ரணில் அரசிற்கு வெளியில் நிற்பதுதான். இந்த அணி இருக்கும்வரை நெருக்கடிக்களம் சூடாக இருப்பதற்கே வாய்ப்புக்கள் உண்டு.
தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளில் முழுமையாகவே நம்பிக்கை இழந்துள்ளனர். கூட்டமைப்பிலும் நம்பிக்கை இல்லை மாற்றாக வந்தவர்களிலும் நம்பிக்கை இல்லை. எந்தத் தரப்பும் தமிழ் மக்களின் நலன்களிலிருந்து நெருக்கடி மைதானத்தில் தலையீடு செய்யவில்லை. இதனால் இந்த விவகாரத்தை சிவில் அமைப்புக்கள் தங்கள் கைகளில் எடுப்பதற்கு முயற்சிசெய்து வருகின்றன. தமிழ் மதத் தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி ஒருங்கிணைந்து குரல் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
சிவில் தரப்பில் இன்னோர் பிரிவினர் தமிழ்ப் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய ஆவணத்தை கூட்டாக தயாரித்து அதனை தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் முன்வைக்க இருக்கின்றனர். அந்த ஆவணத்தை ஒருங்கிணைந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் முன்னெடுக்காவிட்டால் இக் கட்சிகளை தமிழ் மக்களிடம் அம்பலப்படுத்தி அரங்கிலிருந்து அவற்றை அகற்றுவதைத் தவிர வேறு தெரிவில்லை.
“நதிகள் ஒருபோதும் பின்னோக்கி பாய்வதில்லை”
தமிழ்க் கட்சிகள் இதனைப் புரிந்துகொள்ளுமா?