எதிர்வரும் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
இலங்கையிடம் தெளிவான திட்டம் மற்றும் தெளிவான பாதை உள்ளது. அதனை பின்பற்றுவதன் ஊடாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிர்வரும் ஐந்து மாதங்களில் தீர்வு காண முடியும். அதுவரை கடினமாக காலமாக அமையும்.
எவ்வாறாயினும், ஒளியை காணக்கூடிய சுரங்கத்தின் விளிம்பினை அடைந்துள்ளோம். எனவே, மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட கடன் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, அந்தந்த நபர்களின் எதிர்கால கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் வணிகம்/திட்டங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தச் சலுகைகள் வழங்கப்படும்.
தற்போதுள்ள பெரும் பொருளாதார சவால்கள் மற்றும் கூடுதல் நிவாரணம் வழங்குமாறு அரச நிறுவனங்கள் உட்பட பல பங்குதாரர்களின் கோரிக்கைகள், அதாவது சுற்றுலாத் துறை மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானங்களை கருத்தில் கொண்டு மத்திய வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.