நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்யப்பட்ட விடயத்தில் பொதுமக்களின் கருத்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கருத்துக்கள் குறித்து கொஞ்சமும் கவனத்திற்கொள்ளவில்லை. இந்நிலையில், தற்போதைக்கு மகாநாயக்கர்களின் ஆலோசனைப்படி உடனடியாக சர்வ கட்சி அரசாங்கமொன்று நிறுவப்பட வேண்டும். அதன் மூலம் பொதுமக்களின் துன்ப, துயரங்களைப் போக்குவதற்கான செயற்பாடுகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
கடந்த பொதுத் தேர்தலில் ரணில் திருடன், மத்திய வங்கிக் கொள்ளைக்காரன் என்றெல்லாம் விமர்சித்து பொதுஜன பெரமுண கட்சியினர் அவரை நாடாளுமன்றத்திற்கே வரவிடாமல் தோற்கடித்தனர். அப்படியான கட்சியில் இருந்து கொண்டு தற்போது தினேஷ் குணவர்த்தன ரணிலின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு பிரேரிப்பதற்கு எந்த வகையில் நியாயமாகும்?
ரணில் தான் திருடன், கொள்ளைக்காரன் இல்லை என்றால் தனக்கு எதிராக குற்றம் சாட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருட்டு, கொள்ளை, ஊழல்களில் ஈடுபட்ட இந்தக் குழுவினரை அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர் என்றும் ஓமல்பே சோபித தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.