பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரகசியத் தேர்தல் மூலம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 134 வாக்குகளும், டளஸ் அழகப்பெருமாவிற்கு 82 வாக்குகளும் அனுரகுமார திசாநாயக்காவிற்கு 3 வாக்குகளும் கிடைத்துள்ளன. ரணில்விக்கிரமசிங்க எஞ்சிய காலத்திற்கு ஜனாதிபதியாக பதவி வகிப்பார். இந்தத் தேர்தலில் பலர் விலைபோயுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. டளஸ் அழகப்பெருமாவிற்கு ஆதரவு தருவதாகக் கூறிய கட்சிகளின் வாக்குகளைக் கணித்தால் அவருக்கு 113 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். அவருக்கு ஆதரவு தருவதாகக் கூறிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலர் ரணிலுக்கு வாக்களித்துள்ளனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் வாக்களித்துள்ளதாக அதன் செயலாளர் தயாசிறி ஜயசேகரா கூறியிருக்கின்றார். ஜே.வி.பி தலைவர் அனுரகுமாரதிசாநாயக்காவும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாகவும் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் சுமூகமாக ஆட்சி நடாத்துவதற்கு பல தடங்கல்கள் அவருக்கு இருக்கின்றன. காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் முக்கியமான தடங்கலாக இருப்பர். அவர் தெரிவு செய்யப்பட்டார் என அறிவித்த பொழுதே பல இடங்களில் போராட்டங்கள் எழுச்சியடைந்திருந்தன. மக்கள் ஆதரவு அவருக்கு இல்லை என்ற கோஷத்தை அவர்கள் முன்வைக்கின்றனர். கோட்டபாயாவுக்கு எதிரான போராட்டம் என்பது அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிரான போராட்டமே! எனவே அவர்களால் தெரிவு செய்யப்பட்ட ரணிலை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வாதமும் முன்வைக்கப்படுகின்றது.
இனப்பிரச்சினையும் ரணிலுக்கு முக்கிய தடங்கலாக இருக்கும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது. சர்வதேச நாணயநிதியம் இராணுவ எண்ணிக்கையை குறைத்தலையும் நிபந்தனையாக முன்வைத்துள்ளது. தவிர இனப்பிரச்சினையை தீர்க்காமல் நாட்டில் ஸ்திரமான நிலையையும் உருவாக்க முடியாது. தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்திக்கொண்டிருப்பர். ரணில் லிபரல் முக மூடியை அணிந்திருப்பதால் போராட்டங்களை நினைத்தவாறு நசுக்கவும் முடியாது.
ரணிலின் வெற்றி சீனாவுக்கும் ஒரு வகையில் தோல்வியே!
இதனால் சீனாவும் தனது பிடியை வலுவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப் பார்க்கும். போராட்டக்காறர்களுக்கு உதவியளிக்கவும் முற்படும். இந்தியாவும் அதிகரித்த அமெரிக்க பிரசன்னத்தை விரும்பவில்லை. இந்தோ – பசுபிக் மூலோபாயம் காரணமாக அமெரிக்காவுடன் இணைந்திருந்தாலும் தென்னாசியாவில் அதுவும் குறிப்பாக தனது கொல்லைப்புறமான இலங்கையில் அமெரிக்கா தனித்து மேலாதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பப்போவதில்லை. கூட்டமைப்பினை டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்கும்படி வற்புறுத்தியமை உண்மையாக இருந்தால் அதற்கு காரணமாக அமெரிக்க மேலாதிக்கமே இருக்க முடியும். இந்தியா அதனை நிராகரித்திருந்தாலும் இராஜதந்திர உறவுகளில் நிராகரிப்பு என்பது வழமையானதே! 1980களில் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்தது என்பதை இந்தியா இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இவை ஒருபுறமிருக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலை அணுகிய விடயம் தொடர்பாக பலவிமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அச்சு ஊடகங்களிலும் இந்த விமர்சனங்கள் வந்திருக்கின்றன. அதில் முதலாவது சிங்கள தேசத்தின் கட்சிகள் தொடர்பான பார்வையின் கோட்பாட்டுத்தவறாகும். குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் பெரும்தேசியவாதத்தின் லிபரல் பிரிவையும், இனவாதப்பிரிவையும் சேர்ந்தவர்கள்.
எனவே மூன்று பேரும் தமிழ் மக்களின் நண்பர்கள் அல்லர். நண்பர்கள் அல்லாதவர்கள் தொடர்பாக ஒருபோதும் சார்புநிலை எடுக்க முடியாது. அவர்கள் கையாளப்படவேண்டியவர்கள். இவர்கள் தொடர்பில் சமதூரத்திலேயே தமிழ்த்தேசியக் கட்சிகள் நின்றிருக்க வேண்டும். தமிழ் அரசியலில் மரபு ரீதியாகவே பச்சை அணி தொடர்பாக ஒரு ஆதரவுப் பார்வை இருக்கிறது. பச்சை அணிக்குள் ரணில் தரப்பும் அடங்கும் சஜித் தரப்பும் அடங்கும். பச்சை அணியையும் நீல அணியையும் பொறுத்தவரை ஒன்று நசுக்கிக்கொல்லும் பாம்பு, மற்றையது கொத்திக்கொல்லும்பாம்பு. இரண்டினதும் இலக்கு கொலை செய்வதுதான். வரலாற்று ரீதியாக இன அழிப்பில் இரண்டுமே சளைத்ததாக இருக்கவில்லை. அளவில் மட்டும் சிறிய வித்தியாசங்கள் இருக்கலாம்.
ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு சஜித் சார்புநிலையை எடுத்தது. அதன்வழி டளஸ் அழகப்பெருமாவை ஆதரிக்க முடிவுசெய்தது. 2015 ரணில் சார்புநிலையை எடுத்திருந்தது. விக்கினேஸ்வரன் இந்த தேர்தலில் ரணில் சார்புநிலையை எடுத்திருந்தார். கூட்டமைப்பினர் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ரணில் ஆதரவுநிலை எடுப்பதை விரும்பவில்லை எனக் காராணம் கூறலாம். காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் டளஸ் அழகப்பெருமாவை ஆதரிக்கும்படி எந்த இடத்திலும் கூறிவில்லை.
இரண்டாவது தவறு ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றாமை ஆகும். கட்சிகள் தங்களுக்குள் முரண்பட்டாலும் பெரும்தேசியவாதத்தை கையாளும்போதும், சர்வதேச அரசயலைக் கையாளும்போதும் ஒருங்கிணைந்த அரசியல் தமிழ்த் தேசிய அரசியல் நலன்களைப் பொறுத்தவரை அவசியமானதாகும். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாமல் வலிமையான செய்தியை வெளிப்படுத்த முடியாது. தமிழ் சிவில் அமைப்புகள் இந்த ஒருங்கிணைந்த அரசியலை கடுமையாக வலியுறுத்தியபோதும் தமிழ்த்தேசியக் கட்சிகள் அதனை கணக்கெடுக்கவில்லை. மூன்று தமிழ்த்தேசியக் கட்சிகளும் மூன்று திசைகளில் விவகாரத்தை அணுகியிருந்தன. கூட்டமைப்பு அழகப்பெருமாவை ஆதரித்திருந்தது. விக்கினேஸ்வரன் ரணிலை ஆதரித்திருந்தார். சைக்கிள் கட்சி தேர்தலையே புறக்கணித்திருந்தது. இது முழுக்க முழுக்க பொறுப்பற்ற பண்புகளைக்கொண்ட கட்சி அரசியலாகும்.
மூன்றாவது துறைசார் நிபுணர்கள், சிவில் அமைப்புகள் என்பவற்றுடன் கலந்துரையாடி மூன்று வேட்பாளர்களுக்கும் எழுத்து மூலம் கோரிக்கைகளை முன்வைத்திருக்க வேண்டும். அடிப்படை பிரச்சினையான அரசியல் தீர்வு தொடர்பாக அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்.
அரசியல் தீர்வு வரும்வரை இடைக்கால நிர்வாகத்தை வலியுறுத்தியிருக்க வேண்டும். இதனை விட ஆக்கிரமிப்புப் பிரச்சினைகளையும் அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற இயல்பு நிலையைக் கொண்டுவருதல் பிரச்சினைகளையும் ஒரு மாதத்திற்குள் தீர்க்க வேண்டுமென வலியுறுத்தியிருக்க வேண்டும்.
தனித்தனியாக இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தால் அது வலிமையாக இருக்காது. கூட்டாக இன்னோர் வார்த்தையில் கூறவதாயின் ஒரு தேசமாக முன்வைத்திருக்க வேண்டும்.
சமூக விஞ்ஞான ஆய்வுமையம், தமிழ் சிவில் சமூக அமையம் போன்றன கோரிக்கைகளை பட்டியலிட்டு வேண்டுகோள்களை விடுத்திருந்தன. இந்த வேண்டுகோள்களை கட்சிகள் உதாசீனப்படுத்தியிருந்தன. கூட்டமைப்பு எழுத்து மூல ஒப்பந்தம் செய்தது எனக் கூறினாலும் அவை உறுதியானதல்ல. வெறும் சடங்கிற்காகவே அவை செய்யப்பட்டிருந்தன. புதிய அரசாங்கம் உருவாகி ஒரு மாதத்திற்குள் இவை மேற்கொள்ளப்படாவிட்டால் அது பின்னர் நிறைவேறவே மாட்டாது என்பதுதான் கடந்தகால அனுபவம். அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு மூன்று மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்புக்கள், அரசியல் தீர்வு தொடர்பாக கால அட்டவணையே இருக்கவில்லை. இடைக்கால நிர்வாகம் ஒரு கோரிக்கையாகக்கூட இருக்கவில்லை.
விக்கினேஸ்வரன் ஆறு கட்சிகளின் கூட்டுக் கோரிக்கைகளை முன்வைத்ததாகக் கூறப்படுகின்றது. அதில் 13வது திருத்தம் வலியுறுத்தப்பட்ட அளவிற்கு நிரந்தர அரசியல் தீர்வு வலியுறுத்தப்படவில்லை. இக் கோரிக்கைகளும் மூன்று வேட்பாளர்களுக்கும் முன்வைக்கப்படவில்லை. தவிர ஆதரவு கொடுப்பது பற்றி தனது கட்சிக்காரருடனோ, கூட்டணிக் கட்சிக்காரருடனோ எந்தவித கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை. தனது சொந்த குடும்ப விவகாரம் போலவே இதனை அணுகியிருந்தார்
சைக்கிள் கட்சி ஒருங்கிணைவு விவகாரத்தில் தீண்டாமையே கடைப்பிடித்திருந்தது. இது விடயத்தில் சிவில் அமைப்புக்களின் வேண்டுகோள்களையும் உதாசீனப்படுத்தியது. தன்னிச்சையாகவே புறக்கணிப்பு முடிவை எடுத்திருந்தது. குறைந்தபட்சம் தனது கட்சி சார்பிலாவது கோரிக்கைகளை மூன்று வேட்பாளர்களுக்கும் எழுத்தில் சமர்ப்பித்து அவர்கள் அதற்கு இணங்காத போது அதனையும் பகிரங்கப்படுத்தி புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்கலாம். அது ஓரளவிற்காவது வலுவான செய்தியை சொல்லியிருக்கும். இக் கட்சி நகைப்புக்கு இடமான வகையிலேயே விவகாரத்தை அணுகியிருந்தது.
மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மூன்றும் பொறுப்பற்ற வகையிலேயே ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தை அணுகியிருந்தன. இவற்றின் பொறுப்பற்ற தனத்தினால் சர்வதேச கவனிப்பை அதிகம் பெற்றிருந்த இந்தத் தேர்தலில் வலிமையாக செய்தியினை தமிழ் மக்களால் சொல்ல முடியவில்லை
.
இனியும் தமிழ்க்கட்சிகள் தமிழ்த் தேசிய அரசியலை முரணின்றி முன்னெடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு வெளியே தமிழ்த் தேசியத்தளம் ஒன்றை உருவாக்குவது பற்றி யோசிப்பதே நல்லது.
தமிழர் தாயகத்திலும் காலி முகத்திடல் ஒன்ற தேவையாக இருக்கின்றது.