ஜனாதிபதி தெரிவு குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில்,
பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக இதுதான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வுசெய்யப்பட்டமை ஆச்சரியமானதல்ல.
ஆனால், இந்த முக்கியமான தருணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றுத் தவறை மீண்டும் செய்துள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாசைகளையும் பொருட்படுத்தாது கூட்டமைப்பின் தலைமைத்துவம் அரசியல்ரீதியில் ஒரு சிலரின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியிருப்பது மிகவும் தௌ;ளத் தெளிவானது.
இலங்கை அரசியலில் பொறுப்புவாய்ந்த பதவியில் யார் அமரப் போகிறார் என்பதல்ல நமது விடயம்.
வரப்போகும் நபருடன் நமது பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்கான வழிமுறையொன்றைக் கண்டடைதல்தான் அரசியல் முதிர்ச்சி.
அப்படிப்பட்ட முதிர்ச்சி கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் நடவடிக்கையில் எந்தவோர் இடத்திலும் பிரதிபலிக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
சிறுபிள்ளைக்கும் விளங்கும் நடப்பு அரசியல் யதார்த்தம் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தால் புரிந்துகொள்ளப்படாத அதிசயத்தை என்னவென்று சொல்வது.
எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த தமிழ்த் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வாக்குகள் இப்போது தமிழர் பிரச்னைக்குத் தீர்வுவொன்று குறித்துப் பேசமுடியாத நிலையில் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அரசியல் தலைமைத்துவம் என்பது காலத்தின் பொருத்தப்பாட்டை அறிந்து அரசியல் நடப்பைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற நிலையில் மக்களுக்குப் பயன்தரத்தக்க நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதோடு தன்னோடு இணைந்து பயணிக்கும் அனைவரையும் அதே நிலைப்பாட்டில் உறுதியோடும் திருப்தியோடும் நிலைத்திருக்கச் செய்வதாகும்.
ஆனால்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் விட்டுள்ள இந்தத் தவறு, ரணிலின் ஆட்சிக்காலத்தில் இனி எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் தமிழர் தரப்பு நெஞ்சை நிமிர்த்தி நின்று எதிர்பார்க்கவும் கேட்கவும் முடியாது செய்துள்ளது.
தவறான மதிப்பீடு மற்றும் தவறான வழிநடத்தல்களால் தமிழ்த் தேசிய இலக்கை அடைய முடியாத நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
இது தொடர்பான உபாயங்களை செதுக்கி தமிழர் அரசியல் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எனவே, பொறுப்புக்களை கடந்து செல்லாமல் உடனடியாக மத்திய குழுவைக் கூட்டி நடந்த தவறுகளல்ல தப்புக்களுக்கான காரணங்களை ஆராய்வது மட்டுமின்றி பொறுப்புக்கூறவேண்டியதும் மிகவும் இன்றியமையாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று தவறிழைத்துவிட்டது: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா.
அரசியல் நடப்பைப் புரிந்து கொண்டு மக்களுக்கு பயன்தரத்தக்க நிலைப்பாட்டில் தலைமைத்துவம் உறுதியாக நிற்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் வரலாற்று தவறிழைத்துவிட்டது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.