போராட்டகாரர்கள் மீதான தாக்குதலால் அச்சமடைந்துள்ளோம் – ஐ.நா மனித உரிமைகள் பேரவை

கொழும்பில் போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து மிகவும் அச்சமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

மேலும், போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது தடியடி நடத்தப்பட்ட செய்திகளையும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் கண்டித்துள்ளது

.

ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் ஜெரமி லோரன்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை தாக்கியபோது, குறைந்தபட்சம் 48 பேர் காயமடைந்தனர். தாக்குதலின் போது போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இந்த சம்பவத்தில் குறைந்தது நான்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்.

கூடாரங்கள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இரண்டு சட்டத்தரணிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆர்ப்பாட்டங்களைக் கண்காணித்து அறிக்கையிடுவதற்கு உரிமையுடையவர்கள். எனவே இந்தச் செயற்பாடுகளை எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது.

அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக பலாத்காரம் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது.

அவ்வாறான பலத்தை பயன்படுத்துவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். பொருந்தக்கூடிய சர்வதேச சட்டத்தின் கீழ், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே கூட்டங்கள் கலைக்கப்படவேண்டும்.

காலிமுகத்திடல் போராட்டக்களம் மீதான தாக்குதலானது, நாட்டின் பிற இடங்கள் உட்பட அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு அச்சம் மிகுந்த செய்தியை அனுப்பியுள்ளது.

பொருளாதாரம், அரசியல் நெருக்கடி என்பன பொது மக்களின் நல்வாழ்வில் ஏற்படுத்தும் விளைவு குறித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும், எதிர்ப்பை தெரிவிப்பதற்கும் குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு.

இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை பலவந்தமாக தீர்க்க முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பரந்த ஆலோசனைகள் மற்றும் உரையாடல்களின் மூலமே, சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இலங்கையர்கள் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

Recommended For You

About the Author: Editor Elukainews