![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/07/22-62daee68ab888.jpg)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது “ஒரே இரவில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறை” குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாக அமெரிக்கா தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த எதிர்காலத்திற்கான இலங்கையர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு வாய்ப்பும் பொறுப்பும் இருப்பதாகவும் அவர் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரஜைகளை ஒடுக்குவதற்கான நேரம் இதுவல்ல என்றும் அமெரிக்கத் தூதுவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். மாறாக, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும் அரசாங்கம் எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது படையினர் நேற்று இரவு தாக்குதல் நடத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர்.
மேலும், போராட்டகாரர்களின் கூடாரங்களையும் அகற்றியிருந்ததுடன், செயற்பாட்டாளர்கள் பலரையும் கைதுசெய்திருந்தனர்.
அத்துடன், ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு உலக நாடுகளின் தூதுவர்கள், மனித உரிமைகள் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.