காலிமுகத்திடல் போராட்டத்தை அடக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பல எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
போரட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் நேற்று(22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “காலிமுகத்திடல் போராட்டத்தை அடக்குவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் அவசரத்துடன் இணைந்த அதிரடி நடவடிக்கை முற்றிலும் ஜனநாயக விரோதமானது
அரசியல் களத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள இந்த மக்கள் போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் ஜனநாயக வழியிலும் அணுகுவதற்கு பதிலாக, அடக்கு முறையை பிரயோகித்து அதனை முடக்க முயற்சிப்பது எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தி, பிரச்சினை மேலும் உக்கிரம் அடைவதற்கே வழிவகுக்கும்.
புதிய ஜனாதிபதியும், அவரின் தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கமும் நிதானத்துடன் இந்த போராட்டத்தை அணுகி, ஆரோக்கியமான முறையில் அதற்கான தீர்வினை கொண்டுவருவதற்கான சந்தர்ப்பத்தை தவறவிட்டால், இலங்கையின் எதிர்காலம் நெருக்கடிக்குள் மூழ்கிவிடும்.
இந்த போராட்டம் தொடர்பிலான தவறான அணுகு முறையை கைவிட வேண்டும், போராட்ட சக்திகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்.
தொடரும் எதிர் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தீர்வு காணும் நோக்குடன் கூடிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முன்வரவேண்டும் என ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கோருகின்றோம்.
இலங்கை மீது சர்வதேச ரீதியாக எழுந்திருக்கும் அனுதாபமும் காட்டப்படும் ஆதரவும் இழக்கப்படுமானால், மீட்டெடுக்கப்பட முடியாத இழப்புக்களையும், சீர் செய்ய முடியாத பின்னடைவுகளையும் நாடு நிச்சயம் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை சகல தரப்பினரும் மறந்துவிட கூடாது”என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.