வவுனியா – ஓமந்தையில் இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பில் 2012 இல் இரு எதிரிகள் கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு இடம்பெற்று வருகின்றது.
இந்த சம்பவத்தில் இறந்த இருவரும் கணவன்,மனைவி ஆவர். அவர்களுடைய மகள் நேற்று வவுனியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார். தனது தாய், தந்தையினர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகவும், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் அடையாளம் காட்டப்பட்ட நிலையில், அவை தனது பெற்றோரிடனது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் பின்னர் நகைகள் வவுனியா நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டதாகவும் அந்த நகைகள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நீதவான் நீதிமன்ற தடயப்பொருள் பொருள் காப்பாளரிடம் பொலிஸாரால் கையளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் நீதிமன்ற பாதுகாப்பில் இருந்த நகைகளுடன் நீதிமன்ற உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ளதாகவும் மேல் நீதிமன்ற விசாரணையில் அறிந்து கொண்டதாக சாட்சியமளித்துள்ளார்.
தாய்,தந்தை கொல்லப்பட்ட சோகத்தில் இருந்த தங்களுக்கு நீதிமன்ற காவலில் இருந்த பெற்றோரின் நகைகளை நீதிமன்ற உத்தியோகத்தரே கொள்ளையடித்துள்ளமை நீதிமன்ற வளாகத்திலேயே பாதுகாப்பு இல்லை என்பதினை நினைக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
லண்டனில் இருந்த சகோதரர்கள் இது வெட்கக்கேடான செயல் என கூறியதாக சாட்சியம் வழங்கியுள்ளார். வவுனியா நீதிமன்ற பதிவாளர் மேல் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டார்.நகைகள் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டதையடுத்து உறுதி செய்தார்.
தடயப்பொருள் காப்பாளர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு புதிய வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் சாட்சியம் அளித்தால் இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.