மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் மேல்மாடி வீதியில் வீடு ஒன்றில் வாடகைக்கு பெற்று தங்கியிருந்து கடமையாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவரை தனது வீட்டு வேலைக்கு அமர்திய நிலையில் 2017 மார்ச் 26 ம் திகதி குறித்த பணிப்பெண்ணுக்கு ஆண்பிள்ளை ஒன்று பிறந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையை சீலையால் சுற்றி வீட்டின் கிணற்றினுள் வீசிய நிலையில் பணிப்பெண்ணுக்கு தொடர்ந்து இரத்த போக்கு ஏற்பட்ட காரணமாக மார்ச் 26ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மார்ச் 31 ம் திகதி தனது கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாகவும் தண்ணீரில் நாற்றம் வீதுவதாக பொலிஸாருக்கு வைத்தியர் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் கிணற்றை சோதனையிட்டபோது கிணற்றில் இருந்து சிசு ஒன்றை மீட்டதுடன் பணிப்பெண்ணை கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது குறித்த பணிப்பெண் குழந்தை தனக்கும் வைத்தியருக்கும் பிறந்தாகவும் வைத்தியர்தான் வீட்டில் மகப்பேற்றை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் சிசுவை தான் கிணற்றில் வீசியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என வைத்தியர் தெரிவித்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய குழந்தையின் இரத்த மாதிரியும் வைத்தியரின் இரத்த மாதிரியையும் பெற்று அரச பகுப்பாய்வுக்கு மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மரபணு பரிசோதனை முடிவில் குறித்த குழந்தை வைத்தியருக்கு பிறந்துள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தினால் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மட்டு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, பிரதான பரிசோதகர் தலைமையிலான பொலிஸாரின் தொடர் விசாரணையில் நேற்று கண்டி வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் குறித்த வைத்தியரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து தனக்கு பிறந்த குழந்தையை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பணிப்பெண் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் ஏற்கனவே அவருடைய சகோதரியின் கணவருக்கு பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.