இலங்கை அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களின் பின்னணியில் அமொிக்கா இருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, எவ்வாறான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் எமது அரசாங்கத்தை வீழ்த்த இடமளிக்கமாட்டேன் எனவும் கூறியிருக்கின்றார்.
நேற்றய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியே இங்குள்ளது. ஆனால் அதற்கு நான் உடன்படமாட்டேன். நான் எதிர்கட்சியில் இருந்தாலும், ஆழுங்கட்சியில் இருந்தாலும் உடன்படமாட்டேன்.
எனக்கு ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அமைச்சுப் பதவிகள் எவையும் தேவையில்லை. நாட்டை வீழ்த்தும் மிகப்பெரும் பாவச் செயலுக்கு உடன்படமாட்டேன். அமொிக்காவின் சீ.ஐ.ஏ அமைப்புடன் தொடர்புபட்ட என்.ஈ.ரி என்ற அமைப்பு ஒன்று உள்ளது. இது 1983ல் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அமைப்ப உலகில் 100 நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பின் ஊடாக கடந்த 2020ம் ஆண்டு சட்டம் மற்றும் சமூக மன்றத்திற்கு 1 லட்சத்து 72 ஆயிரத்து 670 டொலர் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்திற்கு 2020ம் ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 85 ஆயிரம் டொலர் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் யூ.எஸ்.எயிட், சீ.எஸ்.ஐ.ஆர், ஓ.ஐ போன்றவற்றின் ஊடாக சமூக மட்ட செயற்பாடுகளுக்காக 2013ம் ஆண்டு தொடக்கம் 2017ம் ஆண்டுவரை
3.9மில்லியன் அமொிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஊடாக செலவிடப்பட்டதாக என்னிடம் உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதனை நான் சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
வேலையை பாருங்கள். எமக்கு அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது. இதனை செய்தால் தாக்குவார்களோ தொியவில்லை. இதனை கூறினால் வீட்டுக்கு தீ வைப்பார்களோ தொியவில்லை. ஆனால் அதற்கெல்லாம் இடமளிக்க முடியாது. அண்மையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த இருவருடன் காலிமுகத்திடலுக்கு அண்மையில் சென்றுகொண்டிருந்தோம்.
அப்போது ரஷ்ய நாட்டவர்கள் கூறினார்கள் இப்படியான ஒரு போராட்டம் உக்ரைனில் நடந்தது. அங்கே ரஷ்ய ஆதரவு ஜனாதிபதியை விரட்டுவதற்காக மக்கள் பூங்காவில் ஒன்று கூடினார்கள். அதில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் தலா 3 டொலர் அமொிக்க துாதரகம் ஊடாக வழங்கப்பட்டது.
மேலும் காலிமுகத்திடலை பார்த்த அவர்கள் உங்கள் நாட்டை உங்கள் ஜனாதிபதி நிர்வகிக்கவில்லை. ஜனாதிபதிக்கும் மேல் அமொிக்க துாதுவர் இருக்கிறார் என்றார். எனக்கு ஒன்றும் புரியில்லை என கூறினேன்.
அதன் அர்த்தம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ வாரத்தில் 3 நாட்களுக்கு யூலி அம்மையாரை சந்திப்பார். அப்போது அவர் ஜனாதிபதியின் மனதுக்குள் தடைகளை போடுவார். அப்போது எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் எடுக்கப்படாது. அப்போது பிரச்சினை உக்கிரமடையும் இதனால் எந்த நாட்டிலிருந்தும் இறுதில் எமக்கு உதவி கிடைக்கவில்லை.
எனவே இதுவே தீர்மானம் மிக்க தருமணமாகும். எமக்கிடையில் எந்தவொரு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் எமது அரசை வீழ்த்தும் முயற்சிகளில் இருந்து நாம் எமது அரசை பாதுகாக்கவேண்டும் என்றார்.