இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் சீர்திருத்த கட்சியின் செயலாளர் நாயகம் கென்னத் ஜெயரட்ணம் என்பவரே சிங்கப்பூர் சட்டமா அதிபர் லூசியன் வொங்கிற்கு கடிதம் மூலம் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.
அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் யுத்தகுற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் என இந்த கடிதத்தின் ஊடாக நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜெனீவாவில்- ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த வருடம் ஆற்றிய உரையில் எங்கள் அரசாங்கம் சர்வதேச நியாயாதிக்கத்தை அங்கீகரித்திருந்தது. கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக பெருமளவு ஆதாரங்கள் உள்ளன .அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பெருமளவிலானவை,கொடுரத்தன்மை கொண்டவை.
எனவே கோட்டாபய மீது குற்றச்சாட்டினை சுமத்துவதற்கான ஆதார தேவைகள் போதியளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அவருக்கு எதிரான குற்றங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் குற்றவியல் முறைப்பாட்டில் காணமுடிகின்றது .அதனை நான் இங்கே மீண்டும் தெரிவிக்க வேண்டியதில்லை.
அந்த குற்றச்சாட்டுகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சரணடைந்த போராளிகள் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டும்,வேண்டுமென்றே குண்டுவீச்சு மருத்துவமனைகள் மீதான பொதுமக்களின் நிலைகள் மீதான எறிகணை வீச்சு, உடல்களை சிதைத்தல் ,பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பாவித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
நான் தமிழனாகயிருந்தாலும் சிங்கப்பூர் பிரஜை என்ற அடிப்படையில் எங்களது பன்முக கலாச்சாரத்தை பாராட்டுகின்றேன்,இது சிறுபான்மை இனத்தவர் நல விவகாரம் இல்லை.கோட்டாபய குடும்பம் சிங்கப்பூரில் தங்கியிருப்பது சிங்கப்பூர் தமிழர்களை அவமதிக்கும் செயலாகும்.
சிங்கப்பூர் தமிழர்களின் உறவினர்கள் பல இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். காயங்களிற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்துள்ளனர்.பட்டினியை எதிர்கொண்டுள்ளனர். அல்லது இருந்த சிலவற்றையும் தொலைத்துவிட்டு நாட்டிலிருந்து தப்பியோட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவே கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.