அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள கொழும்பு விகாரை மகாதேவி பூங்காவில் போராட்டம் நடத்த நாங்கள் தயாராக இல்லை என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
யார் என்ன சொன்னாலும் நாட்டு மக்களுக்கான போராட்டம் காலி முகத்திடலில் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு விகாரை மகாதேவி பூங்காவில் போராட்டக்காரர்களுக்காக இடம் ஒதுக்கப்படும் என அரசாங்கத்தின் பொது பிரதிநிதிகள் கூறுவது தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடி, எரிவாயு நெருக்கடி உள்ளிட்ட நாட்டின் எரியும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்காமல் மக்களை அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்திற்காக விஹார மகாதேவி பூங்காவில் இடம் ஒதுக்கப்படும் என அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதற்கு நாங்கள் தயாராக இல்லை.
இப்போது இந்தப் போராட்டத்தை நடத்தும் இடத்தில் மக்களுக்கு எந்த ஒடுக்குமுறையும் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வெளியேறும் வரை எமது போராட்டத்தை தொடர்வோம். எங்கள் முடிவு மாறாது. இந்த மோசடி ஆட்சியாளர்கள் வீடு செல்லும் வரை போராட்டத்தை தொடர்வோம்.
நாட்டின் எரிபொருள் நெருக்கடியும் எரிவாயு நெருக்கடியும் மோசமடைந்துள்ளன. நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் மக்களை அடக்க முயற்சிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.