அரசின் அடக்குமுறைகளை சிங்கள மக்கள் உணர்கின்றனர்!- சாணக்கியன்

தமிழ் மக்கள் அனுபவித்த அரசின் அடக்குமுறைகளைத் தற்போது சிங்கள மக்களும் உணர்கின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கை அரசியல் வரலாற்றில் தவறுகளைத் திருத்திக்கொள்ள அரசியல் தலைவர்களுக்குப் பல சந்தர்ப்பம் கிடைத்தபோதும் அவர்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணியாகக் காணப்படுகின்றது.

தற்போதைய அரச தலைவர்கள் வரலாற்று ரீதியிலான தவறைத் திருத்திக்கொண்டு பொருளாதார முன்னேற்றம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுத்தால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருமித்த வகையில் தீர்வு காண முடியும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட பொருளாதார வலயங்களை ஸ்தாபித்தால் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளைச் சிறந்த முறையில் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு அவசியம்.

காணாமல் ஆக்கபட்டோர் விவகாரம், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உட்பட அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து அரச தலைவர்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் தற்போது கைதுசெய்யப்படுகின்றார்கள்.

சிறந்த மாற்றத்துக்கான போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களையும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் கைது செய்வதை விடுத்து மத்திய வங்கியைக் கொள்கையடித்தவர்கள், சீனி வரி ஊடாக கொள்ளையடித்தவர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் தீ வைத்தவர்களைக் கைது செய்ய அவதானம் செலுத்துங்கள்.

அவசரகாலச் சட்டம், கைது ஆகியவை தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல. போராட்டத்தில் ஈடுபடுபவர்களைச் சட்டத்தின் ஊடாக அடக்குவதை விடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு அவதானம் செலுத்த வேண்டும்.

அரசமைப்பு ரீதியிலான மாற்றத்தையே போராட்டகாரர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அவற்றைச் செயற்படுத்த அரசு ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews